திரைப் பார்வை: அலையில் ஆடும் காகிதம் – சஞ்ஜு (இந்தி)

0
0

தாசிரியராகவும் இருக்கும் ஒரு இயக்குநரை, தட்டையான, நகர நெரிசலில் நிகழும் ஒரு குமாஸ்தா வாழ்வின் கதை கவர்வதில்லை. அதைவிட, புயல் நடுவில் திசை தெரியாத கடல் பயணக் கதை ஈர்ப்பது இயல்பு. தவிர ஒவ்வோர் இயக்குநரும் தன் படங்கள் ஒரே மாதிரி வகைப்படுத்தப்படுவதையும் ஏற்க விரும்புவதில்லை. இந்தியாவின் புகழ் மிக்க இயக்குநரான ராஜ்குமார் ஹிரானியையும் கதாசிரியர் அபிஜத் ஜோஷியையும் தன்னியல்பில் இருந்து சற்று விலகி, பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்த நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்வில் ஒளிந்திருந்த திரைக்கதைக் கணங்கள் ஈர்த்திருக்கின்றன.

கதை

பிரபல இந்திய சினிமா நட்சத்திரங்கள் சுனில் தத், நர்கீஸ் தம்பதியின் வாரிசான சஞ்சய் தத்தின் வாழ்வு 2013 -ல் அவரது 5 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வரும் நாளில் தொடங்கி, வெவ்வேறு அத்தியாயங்களாகச் சொல்லப்படுகிறது. சஞ்சயின் முதல் படமான ‘ராக்கி’ யில் தொடங்குகிறது ஆரம்ப கால சினிமா வாழ்வு. பின்னர் போதையின் பாதையில் சில வருடங்கள், தாயின் மரணம், அமெரிக்காவில் மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை, மீண்டும் திரைப்படங்கள், தந்தை சுனில் தத் மற்றும் நண்பர் கம்லேஷின் பிணைப்பு, மும்பை குண்டு வெடிப்பு, வீட்டுக்குள் ஆயுதம் (பதுக்கி) வைத்திருத்தல், சிறை வாழ்வு, பிணையில் வரும்போது மீண்டும் வெற்றித் திரைப்படங்கள், தந்தையின் மரணம், சிறை என ஒரு ரோலர் கோஸ்டர் சம்பவங்களின் 161.45நிமிட தொகுப்புதான் கதை.

பார்வை

இந்திய சினிமாவில் வாழும் நட்சத்திரம் ஒருவரின் சரிதம் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை – மறைந்த நட்சத்திரங்களின் சரிதங்களான ‘மகாநடி’ (தெலுங்கு), ‘தி டர்டி பிக்சர்’(இந்தி) நீங்கலாக. படம் தீர்மானிக்கப்பட்டவுடன் சஞ்சய் தத், அவரைச் சார்ந்தவர்களின் பேட்டிகள் எனச் சில மாதங்கள் களப்பணி செய்த இயக்குநருக்கு மிகவும் பிடித்திருந்த மூன்று விஷயங்கள் இவை – தந்தை மகன் பிணைப்பு, கம்லேஷுடனான பாசாங்கில்லாத நட்பு, அவரது அகப் போராட்டங்கள் காரணமாக எடுத்த தவறான முடிவுகள். சொல்லப்போனால், எல்லாவற்றையும்விட இந்த மூன்று விஷயங்களே படத்தில் பிரதான அழகாக வெளிப்பட்டுள்ளன.

ராஜ்குமார் ஹிரானிக்கு இது ஐந்தாவது படம். இவரது முந்தைய படங்களில் இருந்து, ‘சஞ்ஜு’ வித்தியாசப்படுகிறது. மார்டின் ஸ்கார்ஸஸி படங்களின் நாயகனைப் போல, வறுமை, ஏற்றம், போதை, பணம் அதன் பின்னர் இறக்கம் எனப் பல இடங்களில் அவருடைய படங்களை நினைவுபடுத்தும் ஒரு கதைக்களம்.

இத்தனைக்கும் சஞ்சயின் முழு சினிமா வாழ்வு, சல்மான் கானின் நட்பு, முதல் மனைவி ரிச்சா, அவர்களின் மகள் த்ரிஷாலா மற்றும் வழக்கு தொடர்பான ஆழமான பார்வை என எதையும் படம் தொடவில்லை. எதை வைப்பது, எதை விடுவது என்ற குழப்பம் படத்தொகுப்பு தெரிந்த இயக்குநரையே சற்றுக் குழப்பியுமிருக்கிறது. (ஒருவரின் முழு வாழ்வை நிறைவாகச் செதுக்கிக் காட்டிய சிறந்த உதாரணம் ‘நாயகன்’).

இப்படிச் சுருங்கச் சொல்லாமல் இழுக்கும் காட்சிகள், ரூபியாக வரும் அழுத்தம் குறைந்த சோனம் கபூர் காட்சிகள், அது சார்ந்த மலினமான நகைச்சுவை, எழுத்தாளர் வின்னியாகப் படு செயற்கையான கதாபாத்திரத்தில் வரும் அனுஷ்கா சர்மா, ஒட்டாத தடையேற்படுத்தும் பாடல்கள் எனப் பல குறைகள். ஊடகங்களை எதிர்மறையாகக் காட்டும் நோக்கமும் புரியவில்லை. இவற்றைத் தவிர்த்துவிட்டு ராஜ்குமார் ஹிரானியின் வழக்கமான தந்தை மகன் உறவு, நட்பு போன்ற நல்ல பகுதிகளைத் தனியாக ரசிக்க முடியவில்லை.

இந்தக் கதையில் அபாரமாக ஜொலிப்பது நான்கு நபர்கள் – அச்சு அசலாக சஞ்சயாக அதகளப்படுத்தியிருக்கும் ரன்பீர் கபூர், “ப்புத்தர்” என்று அழுத்தமான பஞ்சாபி உச்சரிப்புடன் மகனை பேரன்புடன் ஏற்கும் சுனில் தத் கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல், உயிர் நண்பன் கம்லேஷாக கலக்கியிருக்கும் விக்கி கவுஷல், தாய் நர்கீஸாக வரும் மனிஷா கொய்ராலா ஆகியோர்தாம்.

பழைய பாடல்களைப் பொருத்தமாகவும் அழகாகவும் உபயோகிக்கும் உத்தியும் சிறப்பு. தமிழில் ‘ஆரண்ய காண்டம்’ இதைச் செய்திருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்கள், நிலவியல் காட்சிகள், சிறைச்சாலை எனக் கதையோடு ஒட்டிய ரவிவர்மனின் ஒளிப்பதிவும் சொல்லப்பட வேண்டிய ஒன்று.

தொடர்புக்கு: [email protected]