திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

0
0

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் நலன் தொடர்பாகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் உரையாற்றி உள்ளார்.

தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு 09.08.2018 அன்று பெங்களூரு விமான நிலையத்துக்குத் திரும்பிய திருமுருகன் காந்தியை விமான நிலைய போலீஸார் கைது செய்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தமிழக அரசுக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சென்னை சைபர் கிரைம் போலீஸார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். ஆனால் சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். வேண்டுமானால் சைபர் கிரைம் போலீஸார் 24 மணிநேரம் விசாரித்துக்கொள்ள அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடையை மீறி பேரணி நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் அவர் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

 

இதனைத் தொடர்ந்து திருமுருகன் காந்தியைக் கைது செய்ததைக் கண்டித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை வகித்தார். யாழ்ப்பாணம் மாநகராட்சி உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தீபன் திலீசன், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் இன்பம், அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே ஈழ ஆதரவாளர்களை நசுக்காதே. திருமுருகன் காந்தியை விடுதலை செய் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருமுருகன் காந்திக்கு ஆதரவாகப் பதாகைகளை ஏந்தி இருந்தனர்