திருப்பதியில் மகா கும்பாபிஷேக விழா இன்று தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் வெறிச்சோடிய ஏழுமலையான் கோயில்

0
0

திருப்பதி ஏழுமலையான் கோயி லின் மகா கும்பாபிஷேக திருவிழா இன்று தொடங்குகிறது. இவ்விழா காலத்தில் பக்தர்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள தால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து வெறிச்சோடி காணப் படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மஹா சம்ப்ரோக்‌ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி இன்று முதல், வரும் 16-ம் தேதி வரை மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதற்காக கோயிலில் உள்ள யாக சாலையில் 28 ஹோம குண்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் யாக பூஜை நடைபெற உள்ளது. இதற்காக 44 வேத வல்லுநர்கள், 100 வேத பண்டிதர், 20 வேத பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சதுர்வேத பாராயணம், புராணங்கள், ராமாயணம், மகா பாரதம், பகவத் கீதை போன்றவை ஓதப்பட உள்ளன.

இந்த முறை மகா கும்பாபிஷேக காலத்தில் சர்வ தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம் உட்பட அனைத்து வகை தரிசனத்துக்கும் பக்தர்களை அனுமதிப்பதில்லை என தேவஸ்தானம் முதலில் அறிவித்தது. இதற்கு பீடாதிபதி கள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, குறைவான அளவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தி னார். இதனால், 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை, தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர் என அறிவித்தது. இதுபோல நேற்று 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்திருந்ததது. ஆனால், சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க வந்தனர்.

தேவஸ்தானத்தின் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. குறிப்பாக, அலிபிரி மலையடி வாரத்தில் எப்போதும் வாகனங் கள் அணிவகுக்கும் சோதனைச் சாவடி, பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. தங்கும் அறைகளும் காலியாக காணப்பட்டன. இதேபோல, தலை முடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் வழங்குமிடம், ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் கொடுக்குமிடம் என அனைத்தும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி யது.

மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, நேற்று ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி சிறப்பாக நடைப் பெற்றது.

இதனை முன்னிட்டு, நேற்று மாலை ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வகேசவர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர், வசந்த மண்டபம் அருகே உள்ள புற்றில் மண் சேகரிக்கப்பட்டது. இரவு கோயிலுக்குள் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.

காணிக்கை நாணயங்களை வங்கியில் செலுத்த நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் சில்லறை நாணயங்களையும் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில் வெளிநாட்டு நாணயங்களும் அடங்கும். இவற்றை சல்லடைகள் மூலம் தனித்தனியாக பிரித்து, எண்ணிய பிறகு கோணிப்பைகளில் மூட்டையாக கட்டி அவற்றை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.

தேவஸ்தான நிர்வாக அலுவலகத்திலும் நாணங்களை பிரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறை நாணயங்களை அதிக நாட்கள் வைத்திராமல், உடனுக்குடன் எண்ணி, அவற்றை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரத்தில் மட்டும் ரூ. 2 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டது. தற்போது மேலும் ரூ. 2 கோடி எண்ணப்பட்டு டெபாசிட் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாணயங்களையும் தாமதமின்றி டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.