திமுக தலைவர் கருணாநிதிக்கு 5-வது நாளாக தீவிர சிகிச்சை: நடிகர்கள் விஜய், அஜித், கவுண்டமணி, விவேக் நலம் விசாரிப்பு

0
0

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு 5-வது நாளாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது.

இந்தச் செய்தி வெளியானதும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.  தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கருணாநிதி குணமடைய வேண்டிய கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்தனர். பூசணிக்காய் உடைத்தனர். ‘எழுந்து வா தலைவா’ என கோஷமிட்டனர்.

இந்நிலையில் 5-வது நாளாக கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சரி செய்யப்பட்டு தற்போது சீராகி வருகிறது. சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, மேலும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்’ என கூறப்பட்டிருந்தது.

காவேரி மருத்துவமனை முன்பு நேற்றும் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, முரசொலி செல்வம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரும், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அர.சக்கரபாணி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தனர்.

இதற்கிடையே, நேற்று காலை 10 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் விஜய், மாலையில் வந்த நடிகர் அஜித் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியின் தலைவருமான அஜீத் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், நடிகர்கள் கவுண்டமணி, விவேக், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.