திமுக சார்பில் விரைவில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த முடிவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
0

திமுக சார்பில் விரைவில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் நேற்று கூறியதாவது:

திமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது என ஏற்கெனவே திட்டமிட்டு, இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த மாநாட்டில் தேசிய தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து இதைச் சொல்ல வேண்டும். அதை மக்கள் ஏற்றுக்கொண்டால் நானும் ஏற்றுக்கொள்ளத் தயார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

2019 மக்களவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோரை அழைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இவர்களது தேதி உறுதியானதும் ஆகஸ்ட்டில் இந்த மாநாடு நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.