தினகரன் குக்கர் டோக்கன் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார்: திவாகரன் விமர்சனம்

0
2

ஆர்.கே.நகர் தேர்தலைப் போல மன்னார்குடி பொதுக்கூட்டத்துக்கும் டிடிவி தினகரன் டோக்கன் கொடுத்து ஆட்களைச் சேர்த்ததாக திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த திவாகரன், “தினகரன் அணியினர் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கின்றனர். பொதுக்கூட்டத்துக்கு மக்கள் டோக்கன் கொடுத்து வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். மதியம் 3 மணிக்கெல்லாம் பெண்கள் கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றுவிட்டனர்.

விசாரித்தபோது, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குக்கர் கொடுக்கப்படும் எனக் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். ஆக, எங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது? எங்கிருந்து பணத்தை எடுத்து வீசுகின்றனர் என்பது புரியவில்லை. வீசும் பணத்திற்கு வரி கட்ட வேண்டும். இல்லையென்றால் எல்லோரும் தலையில் கை வைத்துதான் ஆக வேண்டும்” என திவாகரன் விமர்சித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “மன்னார்குடி பவர் சென்டர் ப்யூஸ் போய் உள்ளது” எனப் பேசினார்.