தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்த ஸ்வாட் பள்ளத்தாக்கு புத்தர் மீண்டும் புன்னகைக்கிறார்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிர்மாணம்

0
0

தெற்காசியாவின் மிகப்பெரிய பாறைச் சிற்பங்களுள் ஒன்றாக இருந்து வந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு புத்தர் சிலை 2007-ம் ஆண்டு தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பினரால் தகர்க்கப்பட்டது. 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பாறை புத்தர் சிற்பம் தற்போது மீண்டும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி நிபுணர்களின் உதவியுடன் வடமேற்குப் பாகிஸ்தானில் நிர்மாணிக்கப்பட்டது.

புத்தர் சிற்பத்தின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் துளையிட்டு அதில் வெடிபொருட்களை வைத்து பகுதி பகுதியாக செப்டம்பர் 2007ல் புத்தர் சிற்பத்தைத் தகர்த்தனர் தாலிபான் தீவிரவாதிகள், அப்போது உலகம் வெகுண்டெழுந்தது.

இந்நிலையில் இத்தாலிய அரசு 2.9 மில்லியன் டாலர்கள் செலவீட்டில் 6 மீ உயர பாறைச் சிற்பத்தை மீண்டும் வடிவமைத்து நிர்மாணித்துள்ளது. புத்தர் இப்போது மீண்டும் தாலிபான்களை நோக்கி புன்னகைக்கிறார்.

இந்த மீள்வடிவமைப்பை மேற்பார்வையிட்ட இத்தாலிய நிபுணர் லுகா மரியா ஆலிவியரி, அந்த இடத்தை புனரமைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்றார். முன்பு இருந்தது போன்று இது இல்லை, ஆனால் வேண்டுமென்றே நிர்மாணம் செய்தது எதற்காகவெனில் “சேதம் ஏற்படுத்தப்பட்டது, தகர்ப்பு வெளியில் தெரிய வேண்டும்’ என்றார்.

2012-ல் மறுகட்டுமானம் தொடங்கப்பட்டது, கட்டங்கட்டமாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. முகத்தை மட்டும் மறுகட்டுமானம் செய்ய லேசர் சர்வேக்கள் எடுக்கப்பட்டு பழைய போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டது என்கிறார் தொல்லியல் நிபுணர் மரியா ஆலிவியரி. கடைசி கட்டம் 2016-ல் முழு உருவம் பெற்றது.

இப்போது புத்தரின் புன்னகையை அங்கு மீட்டெடுத்துள்ளனர், இதனால் சீன, தாய்லாந்து சுற்றுலாப்பயணிகள் மீண்டும் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேற்குப் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பாரம்பரிய ஸ்தலங்களை இத்தாலி மீட்டுருவாக்கம் செய்துள்ளது. வரலாற்றை நேசிக்கும் மனிதர்களுக்காகவும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு 2007-ம் ஆண்டு தாலிபான்கள் வசம் இருந்தது, முல்லா ஃபாஸ்லுல்லா ஸ்வாட் பள்ளத்தாக்குத் தலைவரானார். இவர்கள் நாட்டியம், விருந்துகள், கேளிக்கைகளைத் தடை செய்ததோடு சுமார் 400 பள்ளிகளையும் சிதைத்தனர்.

2009-ல் பாகிஸ்தான் ராணுவம் இங்கு தாலிபான்களை விரட்டி அடிக்க தனிப்படை அமைத்தது.

ஆனால் 2018-ல்தான் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் முல்லா ஃபாஸ்லுல்லா கொல்லப்பட்டார். தற்போது புத்தர் மீண்டும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் புன்னகைக்கத் தொடங்கியுள்ளார்.