தாய்லாந்து குகையில் சிறுவர்கள் ஆக்ஸிஜனுக்காக போராட்டம்: மீட்க புதிய முயற்சி; மழையால் பாதிப்பு

0
0

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை போல, தாய்லாந்த்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு ஆக்ஸிஜன் குறைந்து அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு திடீர் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மீட்பு பணியில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகையை சுற்றி பார்க்கச் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாக குகை சூழந்துள்ளதால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்று அவர்கள் குகைக்குள் சிக்கியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டபோதிலும், மோசமான வானிலையால் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால் உள்ளே சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஆக்ஸிஜன் பெட்டிகளை வழங்கி காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில், சிறுவர்கள் இருக்கும் பகுதியில் குகையின் மேல் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக அவர்களை தூக்குவது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது.

இதுமட்டுமின்றி நீச்சல் திறன் படைத்த அமெரிக்க கடற்படை அதிகாரிகள் மீட்பு புணிக்காக அங்கு வந்துள்ளனர். வெள்ளத்தில் நீந்திச் சென்று சிறுவர்களை ஒவ்வொருவராக தோளில் சுமந்தபடி மீட்டு வரலாமா என ஆலோசனை நடைபெறுகிறது. எனினும் பல நாட்கள் உணவு இன்றி ஆக்ஸிஜன் ஒவ்வொருவராக முதுகில்  சுமந்து வர இயலுமா என்ற சந்தேகம் உள்ளது.

 

 இதனிடையே திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக மீட்பு பணி கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.