தாய்லாந்து குகையில் இறுதிகட்ட மீட்பு பணி: மீதமுள்ளவர்களை மீட்க முழுவீச்சில் நடவடிக்கை

0
0

தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட 8 சிறுவர்கள் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க இறுதிகட்ட மீட்பு பணி அங்கு முழு வேகத்தில் நடந்து வருகிறது.

தாய்லாந்தில் உள்ள குகையில் கடந்த 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் 13 சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்நாளில் நேற்று 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றது.

தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் நேற்று முன்தினம் களத்தில் இறங்கி 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுவந்தனர். நேற்று மீட்பு குழுவினர் மேலும் 4 சிறுவர்களை அதிரடியாக மீட்டு வந்தனர்.

மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்டு வருவதற்காக இறுதிகட்ட மீட்பு பணி நடந்து வருகிறது.

 

இதுகுறித்து மீட்பு குழுவின் தலைவரான நரோங்சக் கூறுகையில் ‘‘முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் மீட்பு குழுவினர் வேகமாக செயல்பட்டு இரண்டு மணிநேரம் முன்னதாகவே 4 சிறுவர்களை மீட்டனர். அதே அனுபவத்துடன் தற்போது இறுதிகட்ட மீட்பு பணி நடந்து வருகிறது. எனினும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சற்று சிரமம் இருக்கிறது. எனினும் திட்டமிட்டபடி மீதமுள்ள அனைவரையும் இன்று மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறினார்.

இதனிடையே மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.