தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள்: குறைந்து வரும் ஆக்ஸிஜன்- மீட்க போராடிய வீரர் பலி

0
0

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீர்ர் ஒருவர் உயிரிழந்தார்.

குகையில் சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்குகளை (சுவாசிப்பதற்கு தேவையான காற்று அடங்கிய சிறிய தொட்டிகள்) பொருந்தும் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற கடற்படை வீரர் பலியானதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார். ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

இவர்களை  அணி நிர்வாகம் தேடியுள்ளது. பின்னர், தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிரிட்டிஷ் போன்ற சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு  உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  இருக்கும் இடத்தை  திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்க  மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்த  நிலையில் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குகையிலிருந்து தண்ணீரை வெளியே எடுக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குகையில் ஆக்சிஜன் அளவு குறைந்து வந்ததால் சிறுவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள் என குகையினுள் ஏர் டேங்குகள் பொருத்து வேளையில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அப்பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற வீரர்  நேற்றிரவு பலியானார்.

இது குறித்து தாய்லாந்து கடற்படை கூறும்போது, “சமான் தானாக முன் வந்து மீட்புப் பணிகளை செய்தார். இந்த நிலையில் நேற்று இரவு குகையில் நீந்திக் கொண்டிருக்கும்போது ஆக்சிஜன் பற்றாக்குறைவினால் உயிரிழந்தார்” என்று கூறியுள்ளது.

சமான் குனானின் மரணம் அடைந்த செய்தியை தாய்லாந்து கடற்படை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டு  “குகையில் நீந்துவது ஆபத்தான வேலைகளில் ஒன்று” என்று பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து சிறுவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. குகையில் ஆக்சிஜன் அளவு 21 % லிருந்து 15 %மாக குறைந்துள்ளது. தொடர்ந்து ஆக்சிஜனை அதிகரிக்கும் வேலையிலும், குகையிலிருக்கும் தண்ணீரை  வெளியே எடுக்கும் வேலையிலும்  மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.