தாக்குதல் குறித்து சிறப்பு விசாரணை வேண்டும்: சுவாமி அக்னிவேஷ் வலியுறுத்தல்

0
0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என சுவாமி அக்னிவேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சுவாமி அக்னிவேஷ் ஏஎன்ஐக்கு அறித்த பேட்டி:

இச்சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. விசாரணையும் நடைபெறவில்லை. இதிலிருந்தே இச்சம்பவம் மூடி மறைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. இச்சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நான் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிரவேறு வழியில்லை.

இவ்வாறு அக்னிவேஷ் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 18 அன்று பாக்கூர் அருகே உள்ள லிட்புரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அக்னிவேஷ் சென்றார். அப்போது அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது பாஜக இளைஞர் அமைப்பினர் அவரை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து சுவாமி அக்னிவேஷ் ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுவாமி அக்னிவேஷ் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் வேப ஷியாம் ராவ். 4 வயதில் தந்தையை இழந்த சுவாமி அக்னிவேஷ், தனது தாத்தாவுடன் சத்தீஸ்கர் வந்தார்.

அங்கு சட்டம், வணிகப் பிரிவில் பட்டப்படிப்புகளை முடித்தார். கொல்கத்தாவிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞராக சில காலம் பணிபுரிந்தார்.

பின்னர் ஹரியாணாவுக்குச் சென்று. 1970-ல் ஆரிய சபை என்ற அரசியல் கட்சியை நிறுவிய அவர் 1977-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். பின்னர் கல்வி அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.

இதைத் தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடினார். இதற்காக அவர் பலமுறை கைதானார். புரி ஜெகன்னாதர் கோயிலில் வழிபட இந்துக்கள் அல்லாதோருக்கும் அனுமதி தரவேண்டும் என்ற கோஷத்தை சுவாமி அக்னிவேஷ் எழுப்பியதால் இந்துக்களின் விரோதி என்று விமர்சனம் செய்யப்பட்டார்.