தாக்கப்பட்ட பிரியாணி கடைக்கு நேரில் சென்றார் ஸ்டாலின்: ஊழியர்களுக்கு ஆறுதல்

0
0

 பிரியாணி கடையில் பாக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தாக்கிய கட்சி ஊழியர்கள் யுவராஜ் மற்றும் திவாகர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவத்தை ஏற்கெனவே கண்டித்திருந்த ஸ்டாலின், இன்று தாக்குதலுக்குள்ளான பிரியாணி கடைக்கு நேரில் சென்றார்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் பிரகாஷிடம் ஒரு கும்பல் வம்பிழுத்தது.

அவர்கள் அனைவரும் பிரியாணி கேட்டனர். அனைத்தும் முடிந்து கடையை மூடிவிட்டோம் என்று மேனேஜர் பிரகாஷ் கூறியுள்ளார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ‘நாங்கள் யார் தெரியுமா? எங்களுக்கே இல்லை என்கிறாயா? தலைவர் உடல்நிலை இப்படி இருக்கும்போது கடை திறக்கிறாயா?’ என்று கேட்டுத் தாக்கினர்.

அதில் பிரதானமாக இருந்த நபர் யுவராஜ் என்பவர் பாக்ஸிங் ஸ்டைலில் சரமாரியாக மேனேஜரைத் தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாக்கும் நபர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ் என்று தெரியவந்தது.

சிறிது காலம் இந்து அமைப்பு ஒன்றில் இருந்து கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்ட அவர் 2016-ல் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

இந்த சம்பவத்தில் யுவராஜ், திவாகர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். தாக்குதல் விவகாரம் நெட்டிசன்களால் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இது மின்னல் வேகத்தில் இணையதளத்திலும், வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும் பரவியது.

ஏற்கெனவே இந்தப் பிரச்சினையில் திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் ஹோட்டல் உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்ததோடு இதை திமுக ஏற்றுக்கொள்ளாது நாங்கள் உங்கள் பக்கம்தான் நிற்போம் என்று கூறியிருந்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவிலிருந்து யுவராஜ், திவாகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனை அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் அழைத்த ஸ்டாலின் ஊழியர்களிடம் நலம் விசாரித்தார்.

பின்னர்  தாக்குதலுக்குள்ளான ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு உள்ளே சாப்பிடும் மேஜையில் அமர்ந்து ஊழியர்களை அழைத்து நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார்.

தாக்கப்பட்ட வீடியோ காட்சியில் உள்ள இடங்களையும் பார்த்தார். பின்னர் ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை நிச்சயம் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலினே நேரில் வந்ததால் ஹோட்டல் உரிமையாளர், ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.