தவிக்கும் கேரளா: அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தாலும் தொடரும் கனமழை

0
0

கேரளாவில் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளபோதிலும் தொடர்ந்து அங்கு மழை பெய்து வருகிறது. நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதகிளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிடுகிறது.

இந்தநிலையில் இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி குறைந்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது.

எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தொடர்ந்து சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார்.