தரைப் பாலத்தின் சுவர் மீது மோதி விபத்து; விருதுநகரில் பஸ் கவிழ்ந்து 2 மாணவர்கள், பெண் பலி

0
1

விருதுநகரில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் இறந்தனர்.

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு நேற்று காலை 85 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ்ஸை பண்டிதம்பட்டியைச் சேர்ந்த விஜயக்குமார்(27) இயக்கினார். விருதுநகரில் உள்ள சிவகாசி சாலையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தரைப்பாலத்தின் சுவற்றில் மோதிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில், சூலக்கரையைச் சேர்ந்த கந்தவேல் மனைவி கொட்டியம்மாள் (58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயம் அடைந்த 39 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் கோவிகண்ணன்(19) உயிரிழந்தார். இதையடுத்து, 38 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, அருப்புக்கோட்டை தனியார் பாலிடெக்னிக்கில் 3-ம் ஆண்டு படித்து வந்த சசிக்குமார்(19) செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.