தம்பதி மீது ரசாயன தாக்குதல்: பிரிட்டன் அரசு தீவிர விசாரணை

0
1

பிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரி மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ரசாயனத்தைக் கொண்டு, மேலும் ஒரு தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பிரிட்டன் குடியுரிமை பெற்று சாலிஸ்பரி நகர ஓட்டலில் தங்கியிருந்த ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரியான செர்கி ஸ்கிரிபால் (66), அவரது மகள் யுலியா (33) ஆகியோர் மீது கடந்த மார்ச் மாதம் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு ரஷ்யாதான் காரணம் என பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், சாலிஸ்பரி நகரை அடுத்த அமேஸ்பரி கிராமத்தில் டான் ஸ்டுர்கெஸ் (44), சார்லி ரவுலி (45) தம்பதி மீது கடந்த வாரம் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர்களது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனிடையே, ஸ்கிரிபால் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நோவிசாக் என்ற ரசாயனமே இந்த தம்பதி மீதான தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் ரஷ்ய ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்த தம்பதி மீதான தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி நீல் பாசு தலைமையிலான அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.