தமிழ் படம் 2- திரை விமர்சனம்

0
0

ஒரு கிராமத்தில் நடக்கும் சாதிக் கலவரத்துடன் படம் தொடங்குகிறது. கலவரத்தை அடக்க முடியாமல் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை விழி பிதுங்கி நிற்க, காவல்துறையின் முன்னாள் ஊழியர் சிவாவின் உதவியை நாடுகின்றனர். வசனம் பேசியே கலவரத்தை அடக்கிவிடுகிறார் சிவா. இதற்கிடையில், சிவாவின் மனைவி திஷா பாண்டேவை வில்லன் சதீஷ் கொன்றுவிடுகிறார். அவரைப் பழிவாங்குவதற்காக காவல்துறையில் துணை ஆணையராக சேர்கிறார் சிவா. பின்னர், ஐஸ்வர்யா மேனனை காதலிக்கிறார். அவரையும் வில்லன் கொன்றுவிட, பழிதீர்க்கும் வெறி அதிகமாகிறது. அதில் வென்றாரா, இல்லையா என்பது மீதிக் கதை.

இந்தக் கதைச் சுருக்கத்தை, வழக்கமான ‘தமிழ்ப் படங்கள்’ போல சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தக் கதையே தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலாக்களை கிண்டல் அடிப்பதுதான். எப்பேர்ப்பட்ட சாதிக் கலவரமானாலும் வசனம் பேசியே சினிமா ஹீரோ தீர்த்து வைத்துவிடுவார்..

இரண்டு நாயகிகள் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒருவர் கட்டாயம் கொல்லப்பட்டுவிடுவார் என்று அடிப்படை கதையிலேயே அவர்களது ‘கலாய்’ புரிகிறது.

தன் முதல் படமான ‘தமிழ்ப் படம்’ போலவே அதன் 2-ம் பாகத்தையும் காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் திரைப்படங்கள் மற்றும் நிஜ வாழ்க்கை தருணங்களை கிண்டல் செய்யும் ஸ்பூஃப் படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா என்று டைட்டில் கார்டு போடும்போதே அலப்பறை ஆரம்பமாகிவிடுகிறது.

முதல் படம் போலவே இதிலும் ஸ்பூஃப் காட்சிகளை வைத்தே ஒரு கோர்வையான கதையையும் கொடுத்திருக்கிறார். முன்பை விட இந்த முறை இன்னும் துவைத்து தொங்கவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களமிறங்கியது தெரிகிறது.

இந்த முறை பிரபல நடிகர்கள், பிரபல ஹீரோக்களின் படங்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளையும் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.. ஸ்டேட் முதல்.. நேஷனல் வரை! 24 மணி நேர ஊடகங்கள் முக்கிய பிரச்சினைகளை அணுகும் விதம், அரசியல்வாதிகள் பொது இடங்களில் வெளியிடும் கருத்துகள் ஆகியவற்றையும் விட்டுவைக்கவில்லை.

கதாநாயகிக்கான ‘எவண்டா உன்னப் பெத்தான்’ பாடலில் ’எவன்டி உன்னைப் பெத்தான்’, ‘ஒய் திஸ் கொலவெறி’, ‘அடிடா அவள’, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ போன்ற பாடல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலை “எங்க இருந்தாலும் நல்லா இருடா’ என்று முடித்திருப்பது இன்னும் ரசிக்கவைக்கிறது.

படத்தில் நகைச்சுவை, கிண்டலைத் தாண்டி ஈர்க்கத்தக்க அம்சம் வேறு எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களைக் கிண்டலடிக்கும் காட்சிகளே அதிகம் என்பதால், அந்தப் படங்களைப் பார்க்காதவர்களுக்கு அவை பிடிபடுமா என்பது சந்தேகம்.

இதுதவிர, சிரிப்பே வராத நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. சில இடங்களில் கலாய்க்கிறேன் பேர்வழி என நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் ரசிகர்கள் ஸ்பூஃபுக்கு அதிகம் பழகிவிட்டார்கள் என்பதை இயக்குநர் யோசித்து சில மாற்றங்களை செய்திருக்கலாம். முதல் பாகம் போலவே, இதிலும் கஸ்தூரியை வைத்து ஒரு கவர்ச்சியான ஐட்டம் நம்பர் பாடலை வைத்துள்ளனர். தமிழ் சினிமா ஃபார்முலாக்களை கிண்டலடிக்கும் அமுதனே கிளிஷேக்களில் சிக்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

முதல் பாகம் போலவே நகைச்சுவை நாயகன் என்ற வார்ப்பில் கச்சிதமாகப் பொருந்தி தன் தோற்றம், உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றால் நகைச்சுவைக் காட்சிகளுக்கு மெருகேற்றுகிறார் சிவா. உடல் சற்று பருமனாகியிருந்தாலும், அதை நடனக் காட்சிகளில் நகைச்சுவைக்கு பயன்படுத்திக்கொள்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சதீஷ் பல கெட்டப்களில் தோன்றுவதோடு நகைச்சுவைக்கு தக்க துணைபுரிகிறார். சேத்தன், கலைராணி. சந்தானபாரதி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர்.

கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பாடல் வரிகளும் பகடியாகவே எழுதப்பட்டுள்ளன. கலை இயக்கம், விஷுவல் எஃபெக்ட்ஸ் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

கிளைமாக்ஸ் காட்சியில், ‘போங்கடா.. போய் பசங்கள படிக்க வைங்க.. (‘தேவர் மகன்’ வசனம்) இன்ஜினீயரிங் மட்டும் படிக்க வச்சிராதீங்க’ என்று சிவா சொல்லும்போது, இடையிடையே வந்த சில மொக்கைகள்கூட மறந்துபோய், வயிறுகுலுங்கலோடு அனுப்பி வைக்கிறார்கள்.

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், வாய்விட்டு சிரிக்க வைத்ததற்கும், அரசியல் விவகாரங்கள், சமூக அவலங்களை துணிச்சலாக கிண்டலடித்ததற்கும் பாராட்டியே ஆகவேண்டும்.