‘தமிழ்ப்படம் 2’வின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியது விஜய் டிவி

0
0

‘தமிழ்ப்படம் 2’வின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’. சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி. இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார்.

நேற்று (ஜூலை 12) இந்தப் படம் வெளியானது. ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே முதல் நாள் முதல் காட்சியை அதிகாலையில் திரையிடுவர். அதை உடைத்து, சில திரையரங்குகளில் ‘தமிழ்ப்படம் 2’ அதிகாலை 5 மணிக்கே வெளியானது. படம் தொடங்கியது முதல் முடியும் வரை அருமையாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித், விஜய் தொடங்கி, ஹாலிவுட் படமான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வரை கலாய்த்திருக்கின்றனர். அதேசமயம் யார் மனமும் புண்படாமல் கலாய்த்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையைப் பெற பலத்த போட்டி நிலவிய சூழ்நிலையில், விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. பொதுவாக, ஒரு படத்தை மனப்பாடம் ஆகும் அளவுக்கு அடிக்கடி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி என்ற விமர்சனம் இருக்கிறது. ‘கும்கி’, ‘துப்பாக்கி’ என அந்த வரிசையில் ‘தமிழ்ப்படம் 2’வும் இணைய இருக்கிறது.