தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆர் எக்ஸ் 100’: நாயகனாக ஆதி ஒப்பந்தம்

0
0

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆர் எக்ஸ் 100’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகிறது. நாயகனாக ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 12-ம் தேதி வெளியாகித் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ்.100’. அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் ஆகியோர் நடித்திருந்தார்கள். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, வர்த்தக ரீதியாகவும் பெரும் லாபத்தை இப்படம் ஈட்டியுள்ளது.

தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் பூபதியே இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் தமிழ் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. ‘ஆர் எக்ஸ் 100’ தமிழ் ரீமேக்கின் நாயகனாக ஆதி நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

’ஆர்.எக்ஸ் 100’ ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருப்பது குறித்து, “ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாகப் பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.

இதே நேரத்தில் தெலுங்கில் ‘ஆர் எக்ஸ் 100’ என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்துப் படம் பார்க்கச் சொன்னார். எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன்.

இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.

இம்மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக்க நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது” என்று ஆரா சினிமாஸ் தெரிவித்திருக்கிறது.