தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு எதிரொலி; மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது சிபிஎஸ்இ

0
0

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கவும், புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான அடுத்தகட்ட கலந்தாய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே 6-ம் தேதி நாடு முழுவதும் 136 நகரங்களில் நடத்தப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 11 பிராந்திய மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.

தமிழகத்தில் 10 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 170 மையங்களில் நடந்த தேர்வை 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவ தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளையும் தேர்வு செய்து சேர்ந்து வருகின்றனர்.

தவறான வினாக்கள்

இந்நிலையில், நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்தன. தவறான வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், ‘‘நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த 196 மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 2 வாரத்துக்குள் புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும்’’ என கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவால் ஏற்கெனவே மருத்துவ சேர்க்கை பெற்றுவிட்ட மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. தற்போதைய சூழலில் இவ்வாறு மேல்முறையீடு செய்தால் அது சட்டரீதியாக சரியாக இருக்குமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அமைச்சரகமும் ஆலோசித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீட் தேர்வுக்கு வழங்கப்படும் 11 பிராந்திய மொழி வினாத்தாள்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள கேள்வியே சரியானது என ஏற்கெனவே சிபிஎஸ்இ தரப்பில் மாணவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டதை உயர் நீதிமன்ற மதுரை கிளை கவனத்தில் கொள்ளவில்லை என்பதே சிபிஎஸ்இ தரப்பு வாதமாக இருக்கும் என மத்திய அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், அப்போது தங்கள் தரப்பு கருத்தையும் கேட்ட பிறகே உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் டிகே.ரங்கராஜன் எம்.பி. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கலந்தாய்வு நிறுத்திவைப்பு

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக்குழு செயலரும், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநருமான ஜி.செல்வராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ‘‘உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, சுயநிதிப் பிரிவில் மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்காக ஜூலை 16, 17, 18 தேதிகளில் நடக்க இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது. புதிய கலந்தாய்வு தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்’’ என்று ஜி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 2,639 இடங்கள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 862 இடங்கள் என மொத்தம் 3,501 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல அரசு பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள 153 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களும் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டு விட்டன.

அடுத்ததாக, நிர்வாக ஒதுக்கீட்டில் வேலூர் சிஎம்சி உள்ளிட்ட12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 723 எம்பிபிஎஸ் இடங்கள், 16 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 645 பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.