தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள்; சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக் கூடாது: கி.வீரமணி

0
0

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக் கூடாது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருந்தனர். நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 தவறான கேள்விகள் இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கேள்வி ஒன்றுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் அளித்துப் புதிய தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நீதி இது. கருணை மதிப்பெண்கள் என்பதைவிட நியாயமாக அளிக்கப்பட வேண்டிய மதிப்பெண்களே இவை என்பதுதான் சரியானது.

மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பைப் புறந்தள்ளும் முயற்சியில் சிபிஎஸ்இ ஈடுபடக் கூடாது என்பதே சமூக நீதியாளர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பமும், கருத்துமாகும்” என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.