தமிழின் பெருமை வைரமுத்து… கள்ளிக்காட்டு நாயகனுக்கு நன்றி.. நல்ல பாட்டு தந்தமைக்காக! | Lyricsist Vairamuthu Birthday today!

0
6

சென்னை: கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர் போன்ற உன்னத படைப்புகளுக்கு சொந்தக்கரரான கவிப்பேரரசு வைரமுத்து இன்று 64-வது வயதை தொட்டுள்ளார்.

அறிவு ஒன்றுதான் மனிதனை அழிவிலிருந்து காப்பாற்றும் என்பதனை திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்!

“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”

இது ஒவ்வொரு நொடியும் தன்னை அறிவால் புதுப்பித்திக்கொள்ளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு பொருந்துவதில் ஆச்சரியமில்லை! வெல்வெட் கம்பள விரிப்புக்கு கீழே நெருஞ்சி முள் பதுக்கி இருக்கும் கலைத்துறையில் 38 வருடங்கள் களிப்புற்று, இலக்கியம் படைத்துக்கொண்டிருப்பதே அதற்கு சான்று!

இலக்கியன், கவிஞன், பாடாலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், போராளி என தமிழை செம்மைப்படுத்திக் கொண்டிருக்கும் வடுகப்பட்டியாருக்கு தமிழ்ப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பாராதிராஜாவின் நிழல்கள் திரைப்படத்தில் தொடங்கிய திரைவாழ்க்கையை திரைத்துறையைத் தேடிவரும் பலருக்கு நிழல் தரும் விருட்சமாய் மற்றிக்கொண்டார் வைரமுத்து! கவிஞனுக்கு அலங்காரம் கவிதையில் தான் என்பார்கள். அதை ஒவ்வொரு பாடல்களிலும் பிரதிபலிக்க தவறியதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவரளவுக்கு எந்தக் கவிஞனும் பிரதிபலித்ததில்லை.

தினந்தோறும் நிகழும் சூரிய அஸ்தனமத்தை ” வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்” என்றும், மாலைப்பொழுதை “இது ஒரு பொன்மாலைப்பொழுது” என்றும் அலங்கார அழகுபடுத்த அவரால்தான் முடியும். “எஃகை வார்த்து சிலிக்கான் சேர்த்து வயரூட்டி உயிரூட்டி ஹார்டிஸ்க்கில் நினைவூட்டி அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்தூற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” என்று அறிவியலை எழுதவும் முடியும்.

வீட்டிற்குள் அடைந்துகிடக்கும் ஒரு இளம்பெண் பட்டாம்பூச்சியாய் சிறகை விரித்து வெளியே வரும்போது இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளை… மின்சாரக் கனவு திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசைகள் பாடலில் சொல்லியிருப்பார்.

நம்முடையே வாழ்க்கையே இசையால் ஆனது என்பதை மெய்ப்பிக்கும் வரிகள் அவை.
“பசிகொண்ட நேரத்தில் தாளிக்கும் ஓசை சங்கீதம்
தாலாட்டும் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சப்தம் சங்கீதம்”
என்ற வரிகள் அந்த கள்ளிக்காட்டு கவிஞனில் உள்ள தாய்மைக்கும் பெண்மைக்கும் எடுத்துக்காட்டு.

புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வெண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்” என வளமான தமிழகத்தின் அவாவாக திருடா திருடா திரைப்பட பாடலில் சொல்லியிருப்பார். இது ஒரு கவிஞன் தன்னுடைய பாடலின் மூலம் தன் நாடு எப்படி இருக்கவேண்டுமென்பதை பூடகமாகச் சொல்வது. அவர் ஊடகத்தை பலமுறை இப்படி பூடகமாக பயன்படுத்தியதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

கங்கை, காவிரி, வைகை, என்று நதிகளுக்கு ஏன் பெண்களின் பெயர்களை வைத்தார்கள் என்ற வரலாற்றுக் கேள்விக்கு பதிலளிக்கவே ரிதம் திரைப்படத்தில் ” நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே” பாடலை எழுதியுள்ளார்.

“நடந்தால் ஆறு, நின்றால் அருவி, எழுந்தால் கடலல்லோ”என்ற வரிகள் பெண்மையின் சக்திக்கு சான்று.

இளமை பீறிட்டு முதலிரவில் இணைவதற்காக காத்திருக்கும் காதல் ஜோடியின் வேகத்தை நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவை பாடலில் வர்ணித்திருப்பார்.

“காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை…
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை” என்ற வரிகளைத் தாண்டி ஒரு பெண் காதலனுக்கு கட்டளையிட முடியாது.

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்த
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை
இதுபோதும் எனக்கு என கிராமத்து வாழ்வியலை குறிப்பிடுகிறார்.

கண்ணகி பற்றிய கவிதையொன்றில்…

நீ பத்தினி என்பதில் துளியளவும் சந்தேகமில்லை,
ஆனால் மதுரையை எரிக்க நீ யார் என்று கேள்வி கேட்பதன்மூலம்,
சுயப் பிரச்சனைக்காக மனிதர்கள் பொதுச்சொத்துக்கு தீங்கு விளைவிப்பதை கண்டிக்கிறார்.

“சுடுகாட்டுக்கு நடந்துபோக சக்தி இருக்கும்போதே செத்துப்போ” என்று ஆணித்தரமாக பதிவிடுவதில் இன்றய வாழ்க்கைச் சூழலில் முதியோர்கள் படும் அவலத்தை காணமுடிகிறது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், கவிதை தொகுப்புகள், நாவல்கள், தொடர்கள் என்று வைரமுத்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கு ஆற்றும் பணிக்காக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவது நம் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!