தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

0
0

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயலில் இருந்து 42 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில், ஏம்ப வயலைச் சேர்ந்த சி.பழனிக்கு சொந்தமான படகில் 8 மீனவர் களும் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாலை பகுதியைச் சேர்ந்த எம்.கிருஷ்ணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒ.ஆறுமுகம் ஆகியோருக்குச் சொந்தமான படகில் தலா 7 பேர் வீதம் 14 பேர் என மொத்தம் 22 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதேபோன்று, ஜெகதாப் பட்டினத்தில் இருந்து சி.கணேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 27 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களது 4 நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இவர்களை அங்குள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப் பாணம் சிறையில் அடைக்க உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.