தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது: இராம.கோபாலன் கருத்து

0
0

தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால், சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 கோடி நிதியை ஹஜ் செல்லும் முஸ்லிம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.

மக்களின் வரிப் பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்துசமய அறநிலையத் துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும்.

ஜெருசலேம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் அரசியல்வாதிகள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.