தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால் 3.21 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மும்முரம்

0
0

தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு சுமார் 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு போதியளவு தண்ணீர் வராததால், இந்தாண்டும் ஜூன் 12-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் ஆகிய 6 டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.116 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத ஆண்டுகளில் மட்டும் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆழ்குழாய் கிணறு கள் மூலம் நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு நெல் விதைகள், வேளாண் இயந்திரங்கள், நுண்ணூட்டச் சத்து, உயிர் உரங்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் கள் தூர் வாரப்படுகின்றன. தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 கோடி செலவில் 300 பண்ணைக் குட்டை கள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தஞ்சை உள்ளிட்ட 6 டெல்டா மாவட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்புத் திட்டத் தால் டெல்டா மாவட்டங்களில் இதுவரை 1 லட்சத்து 64 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருந்தால் இப்போதே 3 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும். கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை நன்றாகப் பெய்ததால் தமிழ்நாடு முழுவதும் குறுவை நெல் சாகுபடி நன்றாக இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கரிலும், திருவள்ளூரில் 24 ஆயிரம் ஏக்கர், விழுப்புரத்தில் 21 ஆயிரம் ஏக்கர், வேலூரில் 12 ஆயிரம் ஏக்கர், திருவண்ணாமலையில் 20 ஆயிரம் ஏக்கர், திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி நடை பெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 3 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

குறுவை சீசனில் (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) மொத்தம் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியாகும். அதன்மூலம் 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு குறுவை சீசனில் 40 லட்சம் மெட்ரிக் டன்னும், சம்பா சீசனில் (செப்டம்பர் முதல் டிசம்பர் வரை) 70 லட்சம் மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 110 மெட்ரிக் டன் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.