தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

0
0

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி கோவை மாவட்டம் சின்னகள்ளாறில் 5 செமீ, நீலகிரி மாவட் டம் கூடலூர் சந்தை, தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுச் சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

மேலும் ஆழ்கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது கவனமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.