தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

0
1

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் சனிக்கிழமை காலை முதலே பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம், ”மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு விட்டுவிட்டு மழை பெய்யும். மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளான குமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் 35 கிமீ முதல் 55 கிமீ வேகம் வரை காற்று வீசும்” என தெரிவித்துள்ளது.