தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்டது சிறந்த முடிவு: காலங்காலமாக எதிர்க்கும் கன்னட அமைப்பினரின் திடீர் பாராட்டு

0
0

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்கக்கூடாது என காலங்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கன்னட அமைப்பினர், இப்போது காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது நல்ல முடிவு என பாராட்டி வருகின்றனர்.

கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்ப்பதால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக கடலோர கர்நாடகா, மலநாடு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி, கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கின்றன. நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் அணையில் தொடர்ந்து நீரை தேக்கினால் பேராபத்து ஏற்படும் என கர்நாடக பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்தது.

இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். கடந்த மாதத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 50 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று 65 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவிட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய மழைக் காலங்களில் நீரை தேக்கும் அளவுக்கு கர்நாடகா புதிய அணைகளை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், “கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது தவிர்க்க முடியாதது. மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டினால் இந்த நீரை தேக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மண்டியா முன்னாள் எம்.பி.யும், விவசாய சங்கத் தலைவருமான மாதே கவுடா, “கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்க்கும் போது காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது சிறந்த முடிவு” என பாராட்டு தெரிவித்துள்ளார்.

காலங்காலமாக காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கக் கூடாது என பிடிவாதமாக போராடும் கன்னட அமைப்பினர் பலரும், இந்த முறை தமிழகத்துக்கு நீரை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்தால், அணைகள் தாங்காது என்பதால்தான் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.