தனது கார் மீது தானே பெட்ரோல் குண்டுவீசி நாடகமாடிய அனுமன் சேனா பிரமுகர் உட்பட 3 பேர் கைது

0
1

கட்சியை விளம்பரப்படுத்துவதற்காக கார் மீது பெட்ரோல் குண்டுவீசி நாடகமாடிய இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநில செயலாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ் சூர் அருகே உள்ள புங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் காளி குமார்(34). இவர் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநி லச் செயலாளராக உள்ளார். இவரது நண்பர் ஞானசேகரன் (30) மீஞ்சூர் நகரச் செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் மீஞ்சூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க நேற்றுமுன்தினம் காரில் சென்று கொண் டிருந்தனராம்.

அப்போது, மீஞ்சூர் – வண்ட லூர் வெளிவட்டச் சாலை வழி யாக சென்று கொண்டிருந்தபோது, இவர்களுடைய காரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் காரின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில், காளிகுமார், ஞானசேகரன் ஆகிய இருவரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து, சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காளிகுமார், ஞானசேகரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவை மக்களிடையே விளம்பரப்படுத்தவும், தங்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்காகவும் வேண்டி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். இதற்கு என் அண்ணன் மகன் ரஞ்சித்தை பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி எங்கள் கார் மீது வீச செய்தோம் என அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பொய் புகார் கொடுத்த காளிகுமார், ஞானசேகர், ரஞ்சித் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர்.