டெல்லி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தமிழ்ப் பாடநூல் விநியோகம்

0
0

டெல்லி மாநகராட்சி மூலமாக இயங்கி வரும் தமிழ் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பாடநூல் கழக விலையில்லா தமிழ்ப் பாடப் புத்தகங்களை தமிழக அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் என்.முருகானந்தம் வழங்கினார்.

டெல்லியின் தமிழ்வழி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அரசுப் பாடநூல் நிறுவனத்தின் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை இன்று, இந்திரபுரத்தில் அமைந்துள்ள டெல்லி மாநகராட்சி தமிழ்வழி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் என்..முருகானந்தம் வழங்கினார்,

ஒவ்வொரு ஆண்டும் டெல்லி மாநகராட்சி மூலமாக செயல்படும் இரு தமிழ்வழி ஆரம்பப் பள்ளிகள் மற்றும் இரு தமிழ் வகுப்புகள் கொண்ட ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடப் புத்தகங்களை தமிழ்நாடு அரசுப் பாடநூல் நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது, இதன்மூலம் சுமார் 450 குழந்தைகள் பலன் பெறுகின்றனர்.

இந்த நூல் விநியோகத்தில், கடந்த ஆண்டுகளில் காலதாமதமாக வழங்குவதாகப் புகார் எழுந்து வந்தது. இதன் மீது இந்த வருடம் உள்ளுறை ஆணையர் முருகானந்தம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பலனாக, இந்தமுறை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ்ப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியின் போது இந்திரபுரம் பள்ளியின் தமிழ் ஆசிரியைகள் விசாலாட்சி, ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்நாடு இல்ல உணவு மேலாளரான வி.பி.தெய்வசிகாமணி ஆகியோரும் உடனிருந்தனர்.