டெல்லியில் முஸ்லிம் இளைஞரைத் தாக்கி தாடியை அகற்றிய மூவர் கைது

0
2

டெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை கேலி செய்து அவரது தாடியை அகற்றிய மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து குர்கான் காவல்நிலைய செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போகன் தெரிவித்ததாவது:

”ஹரியாணாவின் மேவாட்டைச் சேர்ந்த ஜஃபாருதீன் என்பவர் ஜூலை 31 அன்று தனது நண்பர் இப்ராகிமைக் காண குர்கான் வந்தார். அப்போது குர்கான் காண்ட்ஸா மண்டி பகுதியில், ஜஃபாருதீனை எதிர்கொண்ட மூன்று நபர்கள் தொடர்ந்து கிண்டலும் கேலியும் செய்து அவரை மதரீதியாக அவமானப்படுத்தியுள்ளனர். எல்லாவற்றையும் மவுனமாக கேட்டுக்கொண்டிருந்த ஜஃபாருதீன் இறுதியாக பதிலடி கொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஜஃபாருதீனைத் தாக்கினர். பின்னர் அவரை ஒரு சலூனுக்கு இழுத்துச் சென்று அவரது தாடியை அகற்றினர். சலூனிலிருந்து வெளியே வரும்போது அந்த இளைஞர்கள் இதைப் பற்றி போலீஸிடம் தெரிவித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்து ஜஃபாருதீனை அனுப்பியுள்ளனர்.

சம்பவம் நடந்த மறுநாள், ஜஃபாருதீன், செக்டர் 37 காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடும் பணி நடந்தது.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட உத்தரப் பிரதேசத்திலிருந்து கவுரவ், ஏக்லாஷ், ஹரியாணாவிலிருந்து நித்தின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.”

இவ்வாறு குர்கான் காவல் நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.