டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண ஆன்மிக சுற்றுலா: இந்திய ரயில்வே ஏற்பாடு

0
0

ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்காக டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண சுற்றுலாவை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தனி யாத்திரை ரயில் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில், ராமாயாணம் யாத்திரைக்காக ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியிலிருந்து சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த பகுதி வரையிலும் சிறப்பு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.

ராமாயணா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் டெல்லியிலுள்ள சப்பிடார் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 14 அன்று தனது பயணத்தை துவங்கும். முதலாவதாக அயோத்தியில் ரயில் நிறுத்தப்படும். இங்கு ராமர், அனுமான் கோயில்களை தரிசித்து விட்டு நந்திகிராம், சீதாமர்கி வழியாக நேபாளத்தில் உள்ள ராமாயண புராதனகால நகரமான சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூருக்கு ரயில் செல்லும். இங்குள்ள ஜானகி மந்திரில் நடைபெறும் பூஜைகளில் ஆன்மிக சுற்றுலா பக்தர்கள் கலந்து கொள்ள முடியும்.

தொடர்ந்து ஜானக்பூர், வாரணாசி,பிரயாக், சித்ராகூட், நாசிக், ஹம்பியில் உள்ள புனித வழிபாட்ட ஸ்தலங்களை தரிசித்து விட்டு ராமேசுவரத்திற்கு ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைகிறது. ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோயில், ராமர்பாதம், கோதண்டராமர் கோயில் உள்ளிட்டவைகளை தரிசித்துவிட்டு ராமாயணா எக்ஸ்பிரஸ் சென்னை வந்தடைகிறது.

ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் இருக்கைகளின் எண்ணிக்கை 800 ஆகும். ஒருவருக்கான மொத்தப் பயணக் கட்டணம் ரூ. 15,120 (இந்தியாவிக்குள்) ஆகும். இந்தக் கட்டணத்தில் ரயிலில் பயணிகளுக்கு உணவும், ஆன்மிக ஸ்தலங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கை பயணம்

ஆன்மிகச் சுற்றுலாவின் கடைசி கட்டமாக இலங்கை செல்ல விரும்புவோர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பிற்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ராமாயணத் தொடர்புடைய நுவரெலியா, ராம்பொட, சிலாபம் ஆகிய நகரங்களில் ஆன்மிகப் பயணத்தை தொடரலாம். இதற்கான கட்டணம் தனி.

சீதை அம்மன் கோவில்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் நுவரெலியா நகரில் “சீதா எலிய” என்ற இடத்தில் சீதை அம்மன் கோயில் உள்ளது. இது ராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது. மேலும் இங்கு ராமர், அனுமனுக்குக் கோயில்கள் உள்ளன.

சீதை அம்மன் கோவில்: கோப்புப்படம்

 

அனுமன் கோயில்

நுவரேலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ராம்பொட ஆகும். ராவணன் சீதையை இலங்கைக்குக் கவர்ந்து வந்த போது சீதையைத் தேடி வந்த அனுமன் இந்தப்பிரதேசத்திலும் தேடியதாகவும் ராவணனுடன் போர் செய்வதற்கு ராமர் படையொன்று இந்தப்பிரதேசத்தில் திரண்டதால் ராம்படை என்ற பெயர் வந்ததாகவும் காலப்போக்கில் ராம்பொடவாக திரிபடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இங்கு அனுமனுக்கு கோயில் உண்டு.

அனுமன் கோயில்: கோப்புப்படம்

 

முன்னேசுவரம் சிவன் கோயில்

 

முன்னேசுவரம் சிவன் கோயில்: கோப்புப்படம்

 

இலங்கையிலுள்ள புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்தில் அமைந்துள்ள சிவனுக்கு ஆலயம் அமைந்துள்ள இடம் முன்னேசுவரம் ஆகும். சிவபக்தனான் ராவணனை ராமன் கொன்றதால், ராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க முன்னேசுவரத்தில் பொன் லிங்கம் ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் ராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் முன்னேசுவரம் ராமேசுவரத்திற்கு முற்பட்டது எனச் சொல்லப்படுகிறது.

இந்த யாத்திரை தொடர்பான மேலும் விவரங்களை www.irctctourism.com என்ற இணையதளத்தில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.