டி20 தரவரிசை: கோலி 4 இடங்கள் சரிவு, ராகுல் 3ம் இடம், 900 புள்ளிகள் மைல்கல்லை எட்டிய பிஞ்ச் முதலிடம்

0
1

ஐசிசி வெளியிட்டுள்ள தற்போதைய டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4 இடங்கள் பின்னடைவு கண்டு 12-ம் இடம் சென்றுள்ளார், மாறாக கே.எல்.ராகுல் 3ம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டி20 நாயகன் ஏரோன் பிஞ்ச் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் 2ம் இடத்தில் இருக்கிறார். அணிகள் தரவரிசையில் இந்தியா 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ராகுல் 70 மற்றும் 101 நாட் அவுட், 6 மற்றும் 19 ரன்களால் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 11வது இடத்தில் உள்ளார். கேப்டன் விராட் கோலி 4 இடங்கள் பின்னடைவு கண்டு 12-ம் இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 900 புள்ளிகள் மைல்கல்லைக் கடந்து சாதனை நிகழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். முத்தரப்பு டி20 தொடர் முடிவில் அவர் 891 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 76 பந்துகளில் 10 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 172 ரன்கள் விளாசியதையடுத்து 900 புள்ளிகள் மைல்கல்லைக் கடந்தார் பிஞ்ச்.

டி20 தரவரிசைப் பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் புதிர் ஸ்பின்னர் ரஷீத் கான் முதலிடமும், பாகிஸ்தானின் ஷதாப் கான் 2ம் இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீச்சாளர்கள் ஆண்ட்ரூ டை, பில்லி ஸ்டான்லேக், இங்கிலாந்தின் அடில் ரஷீத், பிளங்கெட், டேவிட் வில்லே ஆகியோரும் தங்கள் கரியரின் சிறந்த தரவரிசைக்கு வந்துள்ளனர்.

ஆண்ட்ரூ டை 41 இடங்கள் தாவி 7ம் இடத்திலும் அடில் ரஷீத் 9ம் இடத்திலும், பிளங்கெட் 11வது இடத்திலும் உள்ளனர். வில்லே 12 இடங்கள் முன்னேறி 15வது இடத்திலும் ஸ்டான்லேக் 60 இடங்கள் முன்னேறி 19வது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத்தள்ளி இந்தியா 2ம் இடத்திலும், இங்கிலாந்து 4ம் இடத்தில் உள்ளது, மே.இ.தீவுகள் 7ம் இடத்தில் உள்ளது

டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் 9 இடங்களில் உள்ள அணிகள் ஆஸ்திரேலியாவில் 2020-ல் நடக்கும் 16 அணிகள் கொண்ட டி20 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் மீதியுள்ள 6 அணிகள் 2019-ம் ஆண்டு நடைபெறும் 14 அணி தகுதிச் சுற்றில் பங்கேற்றுத்தான் உலகக்கோப்பைக்குள் நுழைய முடியும்.