டி.கே.ராஜேந்திரனை பதவியிலிருந்து நீக்கி புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும்: பேரவையில் ஸ்டாலின் பேச்சு

0
0

 பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசு தன் தவறை உணர்ந்து தமிழக டிஜிபி ராஜேந்திரன் நியமனத்தை உடனடியாக ரத்து செய்து புதிய டிஜிபியை முறைப்படி நியமிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்திப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசும்போது கடந்த ஜூலை 3-ம் தேதி பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள, பொறுப்பு டிஜிபிக்களை நியமிக்கக் கூடாதென்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, தமிழக டிஜிபி ராஜேந்திரனின்  நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

அவரது பேச்சு விவரம் வருமாறு:

“பிரகாஷ் சிங் வழக்கிலே, ஜூலை 3-ம் தேதி அன்று சில கண்டிப்பான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதிலே, குறிப்பாக சட்டம் ஒழுங்கு பொறுப்பை கவனிக்கக்கூடிய மாநில காவல்துறை தலைவர் பதவிக்கு பொறுப்பு டிஜிபிக்களை நியமிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஓய்வுபெறக்கூடிய வயதில் இருக்கக்கூடிய டிஜிபியை மாநில சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக நியமித்து அவருக்கு இரண்டு வருட பதவிக்காலம் வழங்கக்கூடாது என்றும் பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையிலே உத்தரவினை பிறப்பித்திருக்கிறது.

தற்போது, டிஜிபியாக இருக்கக்கூடியவர் பத்து மாதங்கள் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்தார். அவர் ஓய்வுபெறும் நாளில் இரவு 11.30 மணிக்கு மீண்டும் முழு நேரக் காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இருவருட பதவிக் காலமும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய டிஜிபிக்கு அளிக்கப்பட்ட இரு வருட பதவிக் காலம் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு காவல்துறை தலைவர் பதவிக்கு வரவேண்டுமென்று காவல் துறையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இளம் ஐபிஎஸ் அதிகாரிகளெல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்தக் கனவு நிறைவேற முடியாத நிலையிலே, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வேண்டிய நியமன வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டிருப்பதாக இப்போது இருக்கக்கூடிய ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி பதவி கிடைக்காமலேயே அவர்கள் ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஓய்வு பெற்ற அதிகாரி இருப்பதால் பிரகாஷ் சிங் வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கக் கூடிய காவல்துறை சீர்திருத்தத்திற்கு இது ஒரு களங்கத்தை அடையாளமாக காட்டிக் கொண்டிருக்கிறது.

தற்போது டிஜிபி மீது உள்ள ஒரு வழக்கு கூட சிபிஐ விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த நிலையில் ஓய்வு பெறும் நிலையில் இருந்த அவரை டிஜிபியாக நியமித்து இரு வருடங்கள் பணிக்காலம் வழங்கியிருப்பது தவறு என்பது உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 3 அன்று வழங்கிய தீர்ப்பின் மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இனியாவது டிஜிபி நியமனத்தில் அரசு செய்த தவறை உணர்ந்து டிஜிபி நியமனத்தை ரத்து செய்து அண்மையில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே புதிய டிஜிபி நியமனத்தை முறைப்படி செய்திட உச்ச நீதிமன்றம் விரும்பிய காவல்துறையினுடைய சீர்திருத்தத்தை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.