டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மதுரை – திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு

0
0

சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இறுதிப் போட்டியில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் – சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் இரவு 7.15 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

திண்டுக்கல் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் என்.ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன்கள் சேர்த்துள்ளர். தொடக்க வீரரான ஹரி நிஷாந்த், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆர்.விவேக் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். அதேவேளையில் இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட்களை விரைவாக பறிகொடுப்பது சற்று பலவீனமாக உள்ளது. இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் கடைசி ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறினர். இதிலும் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு சவால் கொடுக்கலாம்.

மதுரை பாந்தர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.பி.அருண் கார்த்திக் நல்ல பார்மில் உள்ளார். கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் அருண் கார்த்திக் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

அருண் கார்த்திக்கை தவிர்த்து சீராக ரன்கள் குவிக்கும் பேட்ஸ் மேன்கள் அணியில் இல்லாதது பலவீமான கருதப்படுகிறது. தலைவன் சற்குணம் மட்டும் அவ்வப்போது சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த சீசனில் 191 ரன்கள் சேர்த்துள்ள அவர், நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக திகழ்கிறார்.

டிஎன்பிஎல் சீசன்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் திண்டுக்கல் அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. மதுரை அணி ஒருமுறை கூட வென்றது இல்லை. இந்த சோகத்துக்கு இம்முறை மதுரை அணி முடிவு கட்ட முயற்சிக்கக்கூடும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும்.