டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.4.50 லட்சம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

0
0

டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.4.5 லட்சம் பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ளது அத்திப்பட்டு புதுநகர். இங்கு உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், பொன்னேரி அருகே உள்ள ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன்(42), மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நாள்தோறும், மது விற்பனை தொகையை இரவு வீட்டுக்கு எடுத்துச் சென்று, மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மது விற்பனை முடிந்ததும், கடையில் இருந்து மது விற்பனை தொகை ரூ.4,44,600 தாமோதரன் தனது கைப்பையில் எடுத்து வைத்துக் கொண்டார்.

பிறகு, சக ஊழியர்களுடன் கடையைப் பூட்டிய தாமோதரன், வீட்டுக்குச் செல்வதற்காக அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்துக்கு பணத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உள்ள அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தாமோதரனை வழிமறித்தது.

உடனே அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாமோதரனை அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த தாமோதரன் கீழே விழுந்தார். உடனே, மர்ம கும்பல் தாமோதரனிடம் இருந்த பணத்தை பறித் துக் கொண்டு தப்பியோடியது.

பிறகு, அவ்வழியே சென்ற பொதுமக்கள், தாமோதரனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற தாமோதரன், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள மீஞ்சூர் போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.