ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு 20,000 ரூபாய்! – போதுமானதா தமிழக அரசின் உதவித்தொகை?

0
0

ஜெருசலேம் புனிதப் பயணத்துக்காக உதவித்தொகை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் குறிப்புகளில் கூறப்பட்டிருக்கிறது. இருந்தாலும், அந்தத் தொகை நேரடியாகப் பயணம் செல்பவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லையா?

நாம் வணங்கும் தெய்வங்களோ, புனிதர்களோ அவதரித்து வாழ்ந்த இடங்களைக் காண புனிதப் பயணம் மேற்கொள்வதை வாழ்க்கையின் பெரும்பேறாகக் கருதுகிறார்கள் பலர். பெரும்பாலும், இது எல்லா மதத்தினருக்குமே பொருந்தும். இந்துக்கள் காசி, அமர்நாத்துக்கும், முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குப் புனித யாத்திரை செல்வதைப்போல கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்குச் செல்கிறார்கள். தொலைதூரத்திலுள்ள இது போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்ல அதிகச் செலவாகும். எனவே, இது எல்லோருக்கும் இயலாத காரியம். ஏற்கெனவே ஏழை, எளியோர் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான புனிதப் பயணத்துக்கு உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.  

ஜெருசலேம்

ஜெருசலேம், பெத்லஹேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா கடல் ஆகியவை கிறிஸ்தவர்களின் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன. `இங்கெல்லாம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஏழை எளியோருக்கு இந்த ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான, 10 நாள்கள் புனிதப் பயணத்தை அடுத்த மாதம் மேற்கொள்ள இருக்கிறார்கள். தமிழகத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் நேரடியாக உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்; தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை இணையதளத்திலும் இலவசமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  

`பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை 6-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து நான்கு பேர் பயணம் மேற்கொள்ள உதவித்தொகை கிடைக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தால், பாதுகாவலர் ஒருவர் கட்டாயம் உடன் செல்ல வேண்டும்’ என்று  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், `20,000 ரூபாய்க்கு மேல் செலவாகும் பயணச் செலவை பயணம் செய்பவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; உதவித்தொகை ஜெருசலேம் சென்று திரும்பிய பிறகுதான் அனுப்பிவைக்கப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏசு கிறிஸ்து

புனிதப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து அருள்தந்தை ஜோமிக்ஸிடம் பேசினோம்… 

“முஸ்லிம் சகோதரர்களைப்போல கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று ‘கட்டாயக் கடன்’ எதுவும் கிடையாது. இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹேம், இயேசு திருமுழுக்கு செய்யப்பட்ட ஜோர்டான் நதி, இயேசு உபதேசம் செய்த இடங்கள், சிலுவையில் அறையப்பட்டு இயேசு இன்னுயிர் நீத்த ஜெருசலேம் ஆகிய இடங்களைக் காண வேண்டும், பரவசமான இறை அனுபவங்களைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தில்தான் புனிதப் பயணம் மேற்கொள்கிறோம். ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்லவேண்டியது முக்கியக் கடமையாக இல்லாவிட்டாலும், திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை முக்கியக் கருத்தாக கிறிஸ்தவர்களின் திருமறையான விவிலியம் கூறுகிறது. 

அருள்தந்தை ஜோமிக்ஸ்நிலையாமை உள்ள இந்த உலகத்தில் நிலைப்பது ஆன்மா மட்டுமே. அந்த நிலைத்த வாழ்வுக்கு நாம் அனைவரும் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும். சுயநலம் போன்ற குறுகிய எண்ணத்திலிருந்து வெளியே வந்து ஆன்மிகப் பரவசமடைய திருப்பயணம் பெரிதும் துணைபுரிகிறது. `இறைவன் வாழ்ந்த இடத்தைத் தரிசிக்க வேண்டும்’ எனப் பயணம் செய்வது ஒருவகை தெய்விக அனுபவத்தை அளிக்கும். ஒற்றுமையுடன் பயணம் செல்பவர்களின் மனதில் சமத்துவம், மனித மாண்பு, புரிதல், தாராள எண்ணம், பொதுநலம் போன்றவற்றை புனிதப் பயணம் உருவாக்கும். 

ஆன்மிகத்தை வளர்க்கும் அற்புதப் பயணங்களுள் இதுவும் ஒன்று. யதார்த்தத்தைக் கடந்து மனதில் ஒரு பரவசத்தை, விவரிக்க முடியாத அனுபவங்களைப் புனிதப் பயணம் அளிக்கும். அந்த அனுபவங்களைப் பெற கிறிஸ்தவர்கள் அனைவரும் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும். நான் இதுவரை 23 முறை புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். தமிழக அரசின் உதவித்தொகையை நான் பெற்றதில்லை. ஆனால், ஏழை எளிய மக்களுக்கு இந்தத் திட்டம் நிச்சயம் உதவும் என்பது என் கருத்து. இந்தத் திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டால், அதிகம்பேர் பயனடைவார்கள்’’ என்கிறார் ஜோமிக்ஸ். 

ஜெருசலேம்

தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஜெருசலேம் புனிதப்பயணம் சென்று வந்திருக்கும் ஜோசப்ராஜிடம் பேசினோம்… 

“ஜெருசலேம் புனிதப் பயணத்துக்காக உதவித்தொகை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் குறிப்புகளில் கூறப்பட்டிருக்கிறது. இருந்தாலும், அந்தத் தொகை நேரடியாகப் பயணம் செல்பவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை . தமிழக அரசிடம் நிதி உதவி பெறுபவர்கள், இரண்டு அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே புனிதப் பயணம் செல்ல முடியும். இஸ்ரேல் நாட்டுக்கு நேரடியாக விமானத்தில் பயணம் செய்தால், அதிகச் செலவாகும். இந்தியாவிலிருந்து செல்பவர்கள் எகிப்துக்குச் சென்று, அங்கிருந்து பஸ்ஸில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திலிருக்கும் புனிதத் தலங்களைத் தரிசித்துவிட்டு, ஜோர்டான் வழியாக விமானத்தில் திரும்பிவிடுகிறார்கள். பொதுவாக 10 நாள்கள் பயணத் திட்டத்தில்  விமானச் செலவு, பயணச் செலவு, உணவு, தங்குமிடம் என்று தனியார் ஏஜென்சிகள்  87 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள். ஜோசப்ராஜ்

ஆனால், அரசு உதவி பெறுபவர்கள் பயணம் செய்யும் இரண்டு ஏஜென்சிகளும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயை பயணச் செலவுக்கான தொகையாக வாங்குகிறார்கள். அதில் அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாயை கழித்துக்கொண்டு, மீதியிருக்கும் 80 ஆயிரம் ரூபாயை பயணம் செல்பவர்களிடம் பெற்றுக்கொள்வார்கள். இந்தப் பயணத்தின்போது மற்ற டிராவல் ஏஜென்சிகள் அதிகமான இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்கிறார்கள்; சுற்றிக் காட்டுகிறார்கள். ஆனால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஏஜென்சிகளும் அழைத்துச் செல்லும் இடங்கள் மிக மிகக் குறைவு. அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாயால் புனிதப் பயணம் செல்பவர்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லை. இதனால் தனியார் ஏஜென்ட்டுகளும் அவர்களிடம் கமிஷன் பெறுபவர்களும் மட்டுமே பயனடைகிறார்கள். மேலும், அந்த உதவித்தொகை ஏஜென்சிகளின் கணக்கில் சேருவதற்கு சில மாதங்கள் ஆகலாம். இதனால், ஏஜென்சிகள் அந்தப் பணத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், லாப நோக்கத்தில் பயணிகளிடம் அதிகத் தொகையை வசூலித்து அழைத்துச் செல்கிறார்கள். தமிழக அரசின் பணி, டிராவல் ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்துவிடுவதோடு  முடிந்துவிடுகிறது’’ உண்மையைச் சொல்கிறார் ஜோசப்ராஜ்.  

ஏஜென்ட்டுகள் உதவியில்லாமல் ஜெருசலேம் சென்று திரும்பிய ஒருவர் சொல்கிறார்…

“ஏஜென்ட்டுகள் உதவியில்லாமல், நாமே சென்று வந்தால் 70 ஆயிரம் ரூபாய்க்குள்தான் செலவாகும். மக்கள் விவரம் தெரியாமல் ஏஜென்ட்டுகளிடம் போய் பணத்தை விரயமாக்குகிறார்கள்.”  

உதவித்தொகை பற்றிய விவரம் கேட்க சிறுபான்மை நலத்துறை அமைச்சக அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம்…

“அனைத்து விவரங்களையும் அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். இணையதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று பதில் வந்தது.

ஜெருசலேமுக்குச் செல்லும் ஏழைகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை அறிவித்திருப்பது நல்ல செய்தி. அந்தத் தொகை 20,000 ரூபாயாக அல்லாமல், முழுத் தொகையாக இருந்தால் இன்னும் பல ஏழை, எளியோர் பயன் பெறுவார்கள்.