ஜெயலலிதா மீது அவதூறு செய்யும் வகையில் ஸ்கிரிப்ட் அரசியல் நடத்துகிறார் கமல்: பிக் பாஸ் மீது புகார் அளித்த வழக்கறிஞர் பேட்டி

0
0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் ஸ்கிரிப்ட் அரசியல் நடத்துகிறார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி மீது புகார் அளித்த பெண் வழக்கறிஞர் தெரிவித்தார்.

பிக் பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஆறு வாரங்களைக் கடந்து செல்லும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பெண் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா தனது டாஸ்க்கை ஆரம்பித்தது முதல் தன்னுள் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபத்தை டாஸ்க் என்ற பெயரில் சக போட்டியாளர்கள் மீது காண்பித்து வருகிறார்.

தாடி பாலாஜியை மரியாதைக் குறைவாக அழைத்து, அவர் மீது வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்டவைத்து பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளாகினார். இதைப்பார்த்து கதறி அழுத மும்தாஜிடம் இதெல்லாம் கொஞ்சம், இன்னும் 2 நாள் வச்சி செய்வேன் என்று கூறி மற்றவர்களையும் துன்புறுத்தும் வேலையில் இறங்கியது டேனியல், ஜனனியாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சென்றாயனை நாய், லூஸு என்றெல்லாம் மரியாதை இல்லாமல் திட்டி அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டே கிளம்புகிறேன் என்று கூறியது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கமல் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று சிலரும், இது கமலுக்கு தெரிந்தே ஸ்கிரிப்ட் செய்துதான் நடக்கிறது என்று சமூக வலைதளங்களில் வாத விவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிசால் ரமேஷ் என்பவர் காவல் ஆணையரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் கமல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அவரது புகாருக்கு ஏற்பு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

”நான் 27 ஆண்டுகாலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். தற்போது பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகின்றனர். ஆட்சியைப் பிடிக்க நாங்கள் இவ்வாறு செயல்படுவோம் என்பதற்குப் பதில் அவதூறு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் வாரந்தோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமாக நிகழ்ச்சியில் பேசுகிறார். ஆனால் இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி.

ஆனால் அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சைப்படுத்தி வருகிறார். தற்போது இவருடைய ஏற்பாட்டில் சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா என்பவர் பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார்.

இந்த டாஸ்க்கில் என்னென்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என கமல்ஹாசனும், தனியார் நிறுவனமும் முடிவு செய்கின்றனர். அதன்படிதான் அவர்கள் பேசுகின்றனர் நடிக்கின்றனர். இதில் ரித்விகா என்பவர் பேசும்போது ஐஸ்வர்யா வட மாநிலப் பெண் அவருக்கு தமிழ்நாட்டில் சர்வாதிகாரி ஆட்சி நட்த்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது என்று பேசுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் வருகிற சனிக்கிழமை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல் பேசுவார். எனவே தமிழகத்தில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறாக சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகார் அளித்த வழக்கறிஞர் லூயிசால் ரமேஷிடம் ‘இந்து தமிழ்’ இணையதளம் சார்பில் கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த பதில்கள்:

நீங்கள் அளித்த புகாரை போலீஸார் ஏற்றுக்கொண்டார்களா? என்ன சொன்னார்கள்?

புகாரைப் பெற்றுக்கொண்டார்கள், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க நிகழ்ச்சி நடக்கும் ஸ்டேஷன் அல்லது நிறுவனம் அமைந்துள்ள ஸ்டேஷன் எது என முடிவு செய்து அழைப்பதாகக் கூறியுள்ளனர்.

உங்கள் புகாரில் ஜெயலலிதா மீது அவதூறு என்று கூறியுள்ளீர்கள். அதற்கு என்ன முகாந்திரம் உள்ளது?

நிகழ்ச்சியில் டாஸ்க் என்ற பெயரில் சர்வாதிகாரி என்று ஒரு பெண்ணை முன் நிறுத்துகிறார்கள், அவர் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தூண்டும் விதமாக பாலாஜி மீது குப்பை அள்ளிக்கொட்டுவது, சென்றாயனையும் மற்றவர்களையும் அவதூறாகத் திட்டுவது என்று வலம் வருகிறார். மற்றவர்கள் கேட்கும்போது பிக் பாஸ் சொல்வதை நான் செய்கிறேன் என்கிறார்.

ரித்விகா என்பவர் பேசும்போது தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாதா? என்று பேசுகிறார். இவையெல்லாம் முன்னரே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது. அதனால் தான் ஜெயலலிதாவை அவதூறு செய்வதாகச் சொல்கிறேன்.

உங்கள் புகாரில் கமல்ஹாசன் சனிக்கிழமை இதே போல் பேசுவார் என்று கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறீர்கள், சட்டத்தில் ஒரு குற்றச்சாட்டை யூகத்தின் அடிப்படையில் வைக்க முடியுமா?

கமல்ஹாசனுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என்று அவரே சொல்கிறார், 24 மணி நேரமும் உங்களை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார். ஆகவே அவர் இதைக் கவனித்து வரும்போது அவரது அங்கீகாரத்துடன் இது நடப்பது போலவே கருதுகிறேன்.

சர்வாதிகாரியாக ஒரு டாஸ்க் வைத்தால் அது ஜெயலலிதா தான் என்று நீங்களே ஒப்புக்கொள்வது போல் இருக்கிறதே?

நான் அதிமுகவில் இல்லை, ஆனால் ஜெயலலிதாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். தமிழக மக்களுக்காக சாதாரண அடித்தட்டு மக்களுக்காக அவர் தீட்டிய திட்டங்கள் அவருக்குப் பெரிய புகழைத் தந்தது. என் போன்றோர் கட்சியில் இல்லாவிட்டாலும் அவரைப் பெரிதும் மதிக்கிறோம். அரசியல் மேடையாக பிக் பாஸை கமல் அரசியலுக்குப் பயன்படுத்தும்போது பெண் சர்வாதிகாரி, தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் என்றெல்லாம் வேண்டுமென்றே ஸ்கிரிப்ட் எழுதி வைப்பது ஜெயலலிதாவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த அமைக்கப்பட்டதாகக் கருதுகிறேன்.

ஏன் ஒரு ஆண் சர்வாதிகாரியாக கேரக்டர் வைக்கவில்லை. அதனால் தான் புகார் அளித்தேன்.

வேறு என்ன இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு நெருடலாக உள்ளது?

மனிதாபிமானம் இல்லாமல் ஒருவரை மனம் நோகும்படி அவரெதிரிலேயே கண்டபடி திட்டும்படி காட்சி அமைப்பது, அவமானப்படுத்தும் விதமாக குப்பையை அள்ளி மேலே கொட்டுவது போன்ற நிகழ்ச்சிகளை காட்சியாக அமைப்பது மனிதாபிமானமற்ற செயலாகக் கருதுகிறோம்.

மேலும் ஐஸ்வர்யா கருப்பு மூஞ்சி என்று இந்தியில் திட்டுகிறார். இவையெல்லாம் நிறவெறி பேச்சுகள் இதற்காக மனித உரிமை ஆணையத்தில் நாளை தனியாக புகார் அளிக்க உள்ளேன்.”

இவ்வாறு லூயிசால் ரமேஷ் தெரிவித்தார்.