ஜிம்பாப்வேவில் பொதுத்தேர்தல் முடிவை எதிர்த்து வன்முறை: 3 பேர் பலி

0
0

ஜிம்பாப்வேவில் பொதுத்தேர்தல் முடிவை எதிர்த்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.

ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப்.  ( ZANU–PF ) கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் வன்முறைகள் வெடித்தன. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

வன்முறை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள  ஐக்கிய நாடுகள் சபை, பிரிட்டன் ஆகியவை உடனே அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு ஜிம்பாப்வே அரசை வலியுறுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையில்  எந்த வன்முறையும் இல்லாமல் பொதுத்தேர்தல் செவ்வாய்க்கிழமை  நடந்து முடிந்தது.

இந்தத் தேர்தலில் தற்போது ஜிம்பாப்வேவின் அதிபராக இருக்கும் எமர்சனுக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான நெசன் சாமிசாவுக்கும் கடும் போட்டி  நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆளும் கட்சியான ஜனு பி.எப். ( ZANU–PF ) பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வேவில் 37 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் நடைபெற்ற முதல் தேர்தல் இது.