ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெற கடைசி தேதி என்ன

0
5

ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை திரும்பப் பெற வரும் 14 ஆம் தேதி கடைசி என அறிவித்திருக்கிறார்கள். கடந்த ஒன்பது நாட்களில், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரீஃபண்ட் தொகையை வழங்க வரித் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்வேறு சிக்கல்களால், ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரீஃபண்ட் தொகை நிலுவையில் இருந்தது. இவற்றுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து ஏற்றுமதியாளர்களின் சிக்கல்களைத் தீர்க்க மே 31 முதல் ஜூன் 14 வரை சிறப்பு ரீஃபண்ட் நாட்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.

கப்பல் வணிக ரசீது மற்றும் ரிட்டன் படிவங்களில் உள்ள ஜிஎஸ்டி அடையாள எண் பொருந்தவில்லை என்றால், ஏற்றுமதியாளர்களின் பான் (PAN) எண்ணின் அடிப்படையில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுமதியளித்துள்ளது. ஜி.எஸ்.டி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரிகள் செயலகம், மாநில வரி அலுவலர்களின் ஒத்துழைப்புடன் 31 மே 2018 முதல் 14 ஜூன் 2018 இடையிலான நாள்களில் திருப்புத் தொகை அரைத் திங்கள்’ (ரீபண்ட் போர்ட்நைட்) என்னும் இயக்கத்தினை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபிறகு, வரி செலுத்துவோர்கள், வரி அமைப்பின் மாற்றம் காரணமாக திரண்ட உள்ளீட்டு வரி வரவு, சுழிய வரி வழங்கல்கள், ஏற்றுமதியாகக் கருதப்பட்டவை மற்றும் மின் தொகை பேரேட்டில் உள்ள அதிகப்படியான தொகை போன்றவற்றுக்கான திருப்புத்தொகை பெற சரக்கு மற்றும் சேவைவரிகள் இணையம் www.gst.gov.in வாயிலாக மின்னணு முறையில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் தங்களது வணிகம் சார்ந்த எல்லைக்குட்பட்ட தக்க அலுவலரிடம் GST RFD-O1A எனும் விண்ணப்பப் படிவத்தின் நகலுடன் தொடர்புடைய ஆவணங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். தக்க அலுவலர் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து அவை முறையாக இருப்பின் வரி செலுத்துவோருக்குத் திருப்புத் தொகைக்கான ஒப்புதல் ஆவணம் வழங்குவார். ஏற்கெனவே, திருப்புத் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்து 30/04/2018 அன்றுவரை நிலுவையில் உள்ள வரி செலுத்துவோர்கள், திருப்புத் தொகை பெறத் தேவையான அத்தியாவசியமான இணைப்புகளை அதற்கான தக்க அலுவலர்களிடம் உடனடியாக சமர்ப்பித்து இந்த திருப்புத் தொகை அரைத் திங்கள்’ காலத்தில் தங்கள் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு உள்ளாக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு முதன்மைச் செயலர்/வணிகவரி ஆணையர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க திருச்சிக் கோட்ட இணை ஆணையரால் அனைத்து வரி செலுத்துவோர்களும் தங்களது திருப்புத் தொகை பெறுவதற்கு 14/06/2018 க்குள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு ரீஃபண்ட் நாட்களில், 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடன் ரீஃபண்ட் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளது. மே 31 முதல் ஜூன் 14 வரையிலான சிறப்பு ரீஃபண்ட் நாட்களில் ஏற்றுமதியாளர்களும் வர்த்தகர்களும் தங்களது பகுதியைச் சேர்ந்த ஜிஎஸ்டி அலுவலகம், துறைமுகம் / சுங்க வரி அலுவலகத்துக்குச் சென்று ரீஃபண்ட் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.