ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான முதல் பெண் கீதா மிட்டல்

0
0

ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று நியமனம் செய்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். தற்போது, கீதா மிட்டல், டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

அதேபோல், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக சிந்து சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ராஜேந்திர மேனன், டெல்லி உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியான கால்பேஷ் சத்யேந்திர ஜாவேரி, ஒடிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய அனிருதா போஸ், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியான விஜயா கே. தஹில்ரமணி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேபோல், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய எம்.கே. ஷா, பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய், அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.