ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0
0

காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று குப்வாரா மாவட்டத்தில் லோலாப் பள்ளத்தாக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இரு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் எஸ்.பி.வாய்டு இன்று (வியாழன்) பிற்பகல் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”சில நிமிடங்களுக்கு முன் லோலாப் குப்வாராவில், ஜம்மு காஷ்மீர் காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலதிகத் தகவல்களை அவர் பகிரவில்லை.

19 பேர் சுட்டுக்கொலை

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் மே மாதம் 16-ம் தேதி முதல் தற்காலிகமாக ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திய பிறகு, காஷ்மீருக்குள் ஊடுருவ நடந்த  5-வது முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5  முயற்சிகளையும் இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர்.

மே 18-ம் தேதி ஹந்த்வாரா பகுதியில் 3 தீவிரவாதிகளும் மே 26-ம் தேதி தங்தார் பகுதியில் 5 தீவிரவாதிகளும் மே 6-ம் தேதி மச்சில் செக்டாரில் 3 தீவிரவாதிகளும் ஜூன் 10 அன்று 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

மே மாதம் 16-ம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் 19 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.