ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கவில்லை: பொதுச் செயலர் ராம் மாதவ் மறுப்பு

0
0

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் பிடிபி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. மெகபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனால் பிடிபி ஆட்சி கவிழ்ந்து ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிடிபி கட்சியில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாயின.

பாஜக தலைமையுடன், அதிருப்தி பிடிபி கட்சி எம்எல்ஏக்கள் பேச்சு நடத்தி வருவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இந்தத் தகவலை கட்சியின் பொதுச் செயலர் ராம் மாதவ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. காஷ்மீரில் அமைதி நிலவவும், நல்ல நிர்வாகம், வளர்ச்சி வேண்டியும் தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறுவதையே பாஜக விரும்புகிறது” என்றார்.

இதனிடையே மேலும் ஒரு கருத்தை ட்விட்டரில் ஒமர் பதிவு செய்துள்ளார். ஆட்சி அமைக்க பாஜக விரும்பவில்லை என்று ராம் மாதவ் கூறுகிறார்.

ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைமையோ, பிடிபி கட்சியை உடைக்க முயற்சி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

ஆனால் அதில் உண்மையில்லை என்றும், அதுபோன்ற எந்த முயற்சியையும் பாஜக செய்யவில்லை என்றும் ராம் மாதவ் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். – பிடிஐ