சோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

0
1

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89) உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை சபாநாயகராக இருந்தார்.

அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் மிக அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரகம் பாதிப்பு காரணமாகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த மாதம் திடீரென பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

சற்று அவர் குணமடைந்து வந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.