‘சொந்தக் கட்சியே சொல்படி கேட்டபதில்லையா?’ – கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக

0
0

கர்நாடகா காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தி, விலையை அதிகரித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாட்டை பாஜக கிண்டல் செய்துள்ளது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றபின், முதல் பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது ‘‘விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரூ.34 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. பயிர்க் கடன் தள்ளுபடியால், அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை ஈடுகட்ட, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.1.14 காசுகளும், டீசலுக்கு ரூ.1.12 காசுகளும் வரி உயர்த்தப்படுகிறது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மீதான கலால்வரி 4 சதவீதம் உயர்த்தப்படும்’’ என குமாரசாமி அறிவித்தார்.

மேலும் மின் கட்டணத்தை உயர்த்தி குமாசாமி அறிவிப்பு வெளியிட்டார். கர்நாடகாவில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குமாரசாமி அரசு பதவியேற்றவுடனேயே மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளதாக கர்நாடக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் காங்கிரஸூக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கூறியிருந்தார். உடல் பயிற்சி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ‘பிட்னஸ்’ சவாலுக்கு போட்டியாக, ராகுல் காந்தி ‘பெட்ரோல்’ சவால் விடுத்திருந்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியை இன்று உயர்த்தியுள்ள நிலையில் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் ‘‘ராகுல் காந்தியின் பெட்ரோல் விலை குறைப்பு சவாலை யாருமே ஏற்கவில்லை. கர்நாடகாவில் பதவியில் உள்ள அவர்கள் அரசு கூட, ராகுலின் சவாலை நிராகரித்துள்ளது. எந்த ஒரு தெளிவான சிந்தனையும் இல்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை கூறினால் இப்படி தான் நடக்கும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.