சேவாக் உருக்கம்; ‘உணவை வீணாக்காதீர்கள்’: களிமண் ரொட்டி சாப்பிடும் ஹெய்தி நாட்டை பாருங்கள்

0
0

ஹெய்தி நாட்டில் மக்கள் பசிக்கொடுமையால் களிமண் ரொட்டியைச் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, உணவை வீணாக்காதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடஅமெரிக்க கண்டத்தில், கரீபியன் பகுதியில் இருக்கும் நாடு ஹெய்தி. 3 பக்கமும் கடலால் சூழப்பட்டு இருக்கும் நாடாகும். கடந்த 17-ம் நூற்றாண்டில் இருந்து ஸ்பெயின் ஆதிக்கத்தின் கீழும், பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழும் வந்து விடுதலைப் பெற்றது.

உலகிலேயே மிகுந்த ஏழ்மை நாடான ஹெய்தியில் மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைவாகும். வேலையின்மை அதிகரிப்பு, கூலி குறைவு, வறுமை, பஞ்சம் போன்றவை இன்னும் இந்த மக்களை மோசமான நிலையில் வைத்திருக்கிறது. மருத்துவ வசதிகள் இல்லை, கல்வியின்மை, அடிப்படை வசதிகள் குறைவு என அனைத்தும் இங்கு மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இந்த நாட்டு மக்கள் உணவு 3 வேளை உண்பது என்பது அரிதானதாகும். ஆதலால், இங்குள்ள மக்கள் களிமண்ணில், எண்ணெய், உப்பு ஆகியவற்றைக் கலந்து அப்பளம் போல் தட்டிக் காயவைத்து அவ்வப்போது தங்கள் பசிக்காகச் சாப்பிட்டு வருகின்றனர்.

ஹெய்தி நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைத்தாலும், அதை வாங்கு நுகரும் அளவுக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயமும் இல்லை. இதனால், களிமண்ணால் அப்பளம் போல் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்த ரொட்டியைச் சாப்பிட்டால், பலமணிநேரம் பசியைத் தாங்கும் என்பதால், அங்கு இதை உணவாகக் கொள்கின்றனர்.

இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்னில் உணவுப் பொருட்கள், காய்கறிகள்,பழங்கள், உணவு தானியங்கள் வீணாகி வரும் நிலையில் இதுபோன்ற நாட்டில் மக்கள் களிமண்ணை தின்று வாழ்கின்றனர்.

சேவாக்

 

இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஹெய்தி மக்கள் களிமண் ரொட்டி தயாரித்து சாப்பிடும் வீடியோ இணைத்து கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

வறுமை, பசி, தென் அமெரிக்க நாடான ஹெய்தியில் மக்கள் களிமண்ணில் உப்பு கலந்து ரொட்டியாகச் செய்து பசிக்காகச் சாப்பிட்டு வருகிறார்கள். மக்களே நான் உங்களிடம் கேட்பது, தயவு செய்து நீங்கள் உண்ணும் உணவை வீணாக்காதீர்கள். உங்களால் அந்த உணவின் மதிப்பை அளவிடமுடியாது. ஆனால், ஹெய்தி நாட்டு மக்களுக்கு நாம் வீணாக்கும் உணவு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஆதலால், உங்களிடம் தேவைக்கு அதிகமாக உணவு இருந்தால், தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள். அல்லது ரொட்டி வங்கி ஏதேனும் இருந்தால், அல்லது ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகள் இருந்தால், அவர்களிடம் கொடுத்து உதவுங்கள்

https://twitter.com/virendersehwag

இவ்வாறு வீரேந்திர சேவாக் உருக்கமாகத்தெரிவித்துள்ளார்.