சேதமடைந்த பயிருக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை இழப்பீடு: மகாராஷ்டிர விவசாயிகள் அதிர்ச்சி

0
0

மகாராஷ்டிர மாநிலத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை ஒற்றை இலக்கத்தில் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீடு மாவட்டம், கெஜ் தாலுகாவில் பயிர்ச் சேதத்துக்கு நஷ்டஈடாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பயிர் காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்தியுள்ளது. இதில் 773 விவசாயிகளுக்கு தலா 1 ரூபாயும் 669 விவசாயிகளுக்கு தலா 2 ரூபாயும் 50 விவசாயிகளுக்கு தலா 3 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 702 விவசாயிகளுக்கு தலா 4 ரூபாயும் 39 விவசாயிகளுக்கு 5 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு பெறும் விவசாயிகளின் பட்டியலை பீடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (பிடிசிசி) வெளியிட்டுள்ளது. இதில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மத்திய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா) பீடு மாவட்டத்தில் 11, 68,359 விவசாயிகள் கடந்த ஏப்ரல் மாதம் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம், பயிர் காப்பீடுதாரர் சேர்க்கையில் மாநில அளவில் பீடு மாவட்டம் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் கெஜ் தாலுக்காவில் 15,691 விவசாயிகள் காப்பீடு பெற ரூ.51.42 லட்சம் செலுத்தியுள்ளனர்.