செல்போன் பறித்தவர்களை 4 கி.மீ துரத்திப் பிடித்த கான்ஸ்டபிள்: சம்பளத்துடன் ‘ஹனிமூன்’ செல்ல காவல் ஆணையர் பரிசு

0
0

செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை 4 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த கான்ஸ்டபிளுக்கு, திருமணப் பரிசாக, 4 நாட்கள் தேன்நிலவுக்குச் செல்ல காவல் ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார்.

பெங்களூரு ஹனுமந்த் நகர் பெலந்தூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் கே.இ.வெங்கடேஷ் (வயது 31). இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு இரவுப் பணி முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாஸ்ட்புட் கடையில் வேலைபார்க்கும் ஒருவர் பணிமுடிந்து, வீட்டுக்குத் திரும்புகையில் கையில் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் சென்றார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர், அவர் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். செல்போனைப் பறிகொடுத்தவர் அலறியதைக் கேட்ட, போலீஸ் கான்ஸ்டபிள் வெங்கடேஷ் பைக்கில் சென்ற அவர்களை விரட்டத் தொடங்கினார்.

ஏறக்குறைய 4 கி.மீ. தொலைவு ஓடிய வெங்கடேஷ், கோரமங்கலா பகுதியில் பைக்கில் இருந்த இருவரையும் பிடித்து சாலையில் தள்ளிவிட்டார். அவர்களுடன் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டதில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இதில் வெங்கடேஷிடம் ஒரு திருடன் மட்டும் சிக்கிக்கொண்டார். மற்றொருவர் பைக்கை அங்கேயே விட்டுச் சென்று தப்பினார்.

அதன்பின், அப்பகுதியில் ரோந்துப்பணியில் இருக்கும் போலீஸாருக்கு வெங்கடேஷ் தகவல் அளிக்கவே, அவர்கள் வந்து அந்தத் திருடனை கைது செய்தனர். அந்தத் திருடனை விசாரித்ததில், கோரமங்களா பகுதியைச் சேர்ந்த அருண் தயால் (வயது20) எனத் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, வெங்கடேஷின் செயல் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று வெங்கடேஷை அலுவலகத்துக்கு வரவழைத்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரைப் பாராட்டினார்கள்.

வெங்கடேஷுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஆனால், விடுமுறை கிடைக்காததால், தேனிலவுக்குச் செல்ல முடியாமல் இருந்தார். இதையடுத்து, வெங்கடேஷுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து, கேரள மாநிலம் மூணாருக்கு தேனிலவு செல்லும் டிக்கெட், ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளை போலீஸார் அளித்தனர்.

இது குறித்து கோரமங்களா போலீஸ் துணை ஆணையர் அப்துல் அகத் கூறுகையில், ’’வெங்கடேஷின் சமயோசித புத்தி, துணிச்சல் போன்றவைதான் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியது. அவரின் துணிச்சலைப் பாராட்டி, அவர் தேனிலவு செல்லும் பரிசை அளித்தேன். மூணாரில் 4 நாட்கள் வரை தங்கிவிட்டு வெங்கடேஷ் தங்கியிருக்கும் செலவை நான் ஏற்கிறேன். இந்தப் பரிசு வெங்கேடஷை மட்டுமல்ல, மற்ற போலீஸாரையும் ஊக்கமாகப் பணிசெய்ய உதவும்’’ எனத் தெரிவித்தார்.

இதேபோல திருடன் ஒருவரைப் பிடித்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துணிச்சலைப் பாராட்டி, பெங்களூரு மேற்குமண்டல போலீஸ் ஆணையர் சன்னா அன்னவர், தென் இந்தியா முழுவதும் சுற்றுலா செல்ல சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இது குறித்து வெங்கடேஷ் ’நியூஸ்7 பேப்பர்’விடம் (ஆங்கிலம்) கூறுகையில், ”என்னுடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. ஏராளமான போலீஸார் நாள்தோறும் தங்கள் பணியைச் செய்கிறார்கள். ஆனால், அதில் என்னுடைய பணிக்கு இப்படி ஒரு பரிசும், அங்கீகாரமும் கிடைத்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.