செய்தித்துளிகள்: ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளர்

0
0

* இந்தோனேஷியாவில் அடுத்த மாதம் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்து இரு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த ஜர்மான்பிரீத் சிங், ராமன் தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக ரூபிந்தர் பால் சிங், ஆகாஷ் தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* ஸ்பெயின் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் நடுகள வீரரான லூயிஸ் என்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார். 48 வயதான லூயிஸ் என்ரிக் ஸ்பெயின் அணிக்காக 62 ஆட்டங்களில் விளையாடியவர். மேலும் பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

* சர்வதேச டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், பாகிஸ்தானின் பஹர் ஜமான், இந்தியாவின் கே.எல்.ராகுல் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

* உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் அரை இறுதியில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை காண்பதற்காக பெல்ஜியம் நாட்டின் அரசர் பிலிப் மற்றும் அரசி மதில்டே ஆகியோர் ரஷ்யா சென்றுள்ளனர்.