செயல்பட முடியாத மாற்றுத்திறனாளி மகன் படும் துயரம் தாங்காமல் கொன்ற தந்தை: தானும் தூக்கில் தொங்கினார்

0
0

தான் ஆசையாக தூக்கிவளர்த்த மகன் செயல்பட முடியாமல், வாய்ப்பேச முடியாமல் படுக்கையிலேயே வாழ்க்கை நடத்துவதை சகிக்க முடியாத தந்தை மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் விருது நகரில் நடந்துள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகரில் வசித்தவர் முருகன் (53). சொந்தமாக தச்சுப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி(50). இவர்களுக்கு செல்வேந்திரன் (27), சுரேஷ் கண்ணன் (25), ராகுல் (21) என 3 மகன்கள் உள்ளனர். செல்வேந்திரனும், சுரேஷ் கண்ணனும் படித்து பட்டம் பெற்று சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

கடைசி மகனான ராகுல் பிறந்த சிறிது நாளில் அவருக்கு இரண்டு கை, கால்கள் செயல்படாது, வாய்ப்பேச முடியாது என்பது தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த முருகன், பாக்கியலட்சுமி தம்பதிகள் மூன்றாவது மகன் மேல் அதிக பாசம் வைத்து வளர்த்தனர். வீட்டிலேயே முடங்கிவிட்ட ராகுல் படுக்கையிலேயே கிடக்கும் நிலை ஏற்பட்டது.

தாய் தந்தை இருவரில் யாராவது ஒருவரின் உதவியுடன் ராகுலின் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். மகன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த முருகன் இதனாலேயே ராகுலுடனே அதிக நேரம் செலவழிப்பாராம். பல மருத்துவர்களிடம் காட்டியும் இதற்கு தீர்வு இல்லை என கைவிரித்து விட்டதால் எதுவும் செய்யமுடியாத விரக்தியில் காலத்தை நகர்த்தியுள்ளார்.

தினமும் ராகுலை காலைக்கடன் பின்னர் குளிக்கவைத்து, uணவு கொடுத்து, உடை மாற்றுவது என அனைத்து வேலைகளையும் செய்துவிட்டுத்தான் பட்டறைக்கு செல்வாராம். மதியம் வீட்டுக்கு வந்து மகனுக்கு சோறூட்டுவது மற்ற பணிவிடைகள் செய்வது வரை மகனை அன்போடு பார்த்துக்கொண்ட முருகனுக்கு மற்ற இரண்டு மகன்கள்போல் மூன்றாவது மகன் இல்லையே என்ற வருத்தம் அதிகம் இருந்துள்ளது.

இதுப்பற்றி அடிக்கடி மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். மற்ற இரண்டு மகன்கள் சென்னைக்கு பணியின் காரணமாக சென்றுவிட மகன், மனைவியுடன் தனியாக முருகன் வசித்து வந்துள்ளார். நாளாக ஆக முருகனை பராமரிக்க முடியவில்லை.

மகனுடைய நிலையை காணவும் சகிக்க முடியவில்லை மகனின் இந்த துன்பத்துக்கு விடிவே இல்லையா என வருத்தப்பட்ட முருகன், மகனின் மரணம் தான் அவனுக்கு ஒரு நிம்மதியை தரும் என தீர்மானித்துள்ளார்.

எப்போதும் மகனுடன் முருகனும், பக்கத்து அறையில் பாக்கியலட்சுமியும் படுத்திருப்பது வழக்கம். திடீரென நள்ளிரவில் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவை உடனே செயல்படுத்த முடிவெடுத்த முருகன், மகனை தூக்கிக்கொண்டு வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டுச் சென்றுள்ளார்.

தந்தை இந்த நேரத்தில் தன்னை எங்கே தூக்கிச் செல்கிறார் என கண்ணால் மட்டுமே பேசமுடியும் நிலையில் உள்ள மகன் தந்தையை நோக்க மகனை பார்க்க முடியாமல் அழுதபடி தண்ணீர் தொட்டியில் மகன் ராகுலை மூழகடித்துள்ளார்.

தந்தையின் கையாலேயே மகனது வாழ்வு முடிந்து போக மிகுந்த சோகத்துடன் வெளியே சத்தம் போட்டு அழவும் முடியாமல் மகனது உடலை எடுத்து கீழே கிடத்திவிட்டு வீட்டுக்குள் வந்த முருகன் மகனை தன் கையாலேயே கொன்று விட்டோம் இனி நாம் ஏன் வாழவேண்டும் என்று கதறி அழுதுள்ளார்.

தனக்கு பின் தனது மனைவியை இரண்டு பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று முடிவெடுத்த முருகன் தனது வாழ்வையும் முடித்துக்கொள்ள தீர்மானித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் வழக்கம்போல் எழுந்த பாக்கியலட்சுமி, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து மகனை தேடியுள்ளார். ஆனால் படுக்கையில் மகன் ராகுலை காணவில்லை என்பதை பார்த்து வெளியே ஓடிச்சென்று பார்த்தபோது மகன் ராகுல் தண்ணீர் தொட்டி அருகே பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

அவரது கதறலைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீஸார் இருவர் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பெற்றமகன் படும் துயரத்தை தாங்க முடியாத தந்தைகள் குழந்தைகளை கருணைக்கொலை செய்வது கடந்த ஒரு வருடத்திற்குள் மூன்றாவது சம்பவமாக பதிவாகியுள்ளது. சூளைமேட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட மகளை பராமரிக்க முடியாத தந்தை மகளை கொலை செய்தார், திருவொற்றியூரில் கடந்த மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட 21 வயது மகனை பராமரிக்க முடியாமல் தந்தையே கொலை செய்து பிணத்தை ஒரு இடத்தில் போட்டுவிட்ட துயர சம்பவம் நடந்தது.

தனக்கு பிறந்த குழந்தை மற்ற பிள்ளைகள்போல் ஓடி ஆடி விளையாட முடியாமல் நடைபிணமாக படுக்கையில் கிடப்பதும், அவர்களை பராமரிக்கவும் முடியாமல், சம்பாதிக்க போகவும் முடியாமல், மருத்துவ செலவுக்கு பணமின்றியும் வாடும் பெற்றோர் நிலை ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் ஒன்றுதான். பெற்ற மகனை தந்தையே கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியது அப்பகுதியில் வசிக்கும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.