செயல்படாத  ரகுபதி ஆணையத்துக்கு ரூ.2.23 கோடி செலவு செய்தது ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 

0
1

புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம் தொடர்பாக  விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி தலைமையிலான ஆணையத்துக்கு  கடந்த 3 ஆண்டுகளாக வீணாக ரூ. 2.23 கோடியை செலவு செய்தது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்  திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா,  இந்தக் கட்டிடத்தை பன்னோக்கு அரசு சிறப்பு  மருத்துவமனையாக மாற்றினார்.

மேலும், புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு  கடந்த 2011 ஜூன் 22-ம் தேதி  உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தை எதிர்த்தும், ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்தும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த 26-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘‘விசாரணை ஆணையங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெறும் கண்துடைப்புக்காகவே விசாரணை ஆணையங்களை அரசு அமைக்கிறது’’ என்று வேதனை தெரிவித்த நீதிபதி, இதுவரை அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த  வாதம் வருமாறு:

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்:  புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 22-06-11-ல் ஒரு ஆணையம். வாலிபர் இளவரசன் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கடந்த 4-07-13-ல் ஒரு ஆணையம், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கடந்த 21-01-17-ல் ஒரு ஆணையம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  கடந்த 2018 ஜனவரியில் ஒரு ஆணையம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் என மொத்தம் 5 ஆணையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்துக்கு மட்டும் தடை உள்ளது. நீதிபதி சிங்காரவேலு தனது அறிக்கையை இம்மாத இறுதியில் தாக்கல் செய்யவுள்ளார். எல்லா ஆணையங்களுக்கும் தனியாக அலுவலகங்கள் உள்ளன. நீதிபதி ஆறுமுகசாமி தவிர மற்ற அனைத்து ஆணையங்களுக்கும் அரசு சார்பில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிங்காரவேலன் ஆணையத்துக்கு ரூ.2.06 கோடியும், ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு ரூ.1.47 கோடியும், ஆறுமுக சாமி ஆணையத்துக்கு இதுவரை ரூ.32 லட்சமும், அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு இதுவரை ரூ. 27.75 லட்சமும்  வழங்கப்பட்டுள்ளது. ரகுபதி ஆணையத்துக்கு 2015-16 காலகட்டத்தில் ரூ.69 லட்சமும், 2016-17 காலகட்டத்தில் ரூ.78 லட்சமும், 2017-18 காலகட்டத்தில் ரூ.76 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. ரகுபதி ஆணை யத்துக்கு இதுவரை மொத்தமாக ரூ.4.11 கோடி செலவிடப் பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்: நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.2.23 கோடியை அரசு வீணாக

செலவு செய்துள்ளது. இவ்வாறு வீண்செலவு செய்தது ஏன்? ஆணையம் செயல்படுகிறதா, இல்லையா என்பதைக்கூட அரசு முறையாக கண்காணிக்கவில்லை. இதுபோன்ற தேவையற்ற செலவை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. இந்த ஆணையத்தில் இன்னும் எத்தனை பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்?

அரசு தலைமை வழக்கறிஞர்: தற்போதும் 6 ஊழியர்கள் பணியில் உள்ளனர். தடையாணை நிலுவையில் உள்ளதால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.

(அப்போது நீதிபதி, தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையத்தின் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர், தடையை நீக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளோம், என்றார்.)

நீதிபதி: அப்படியென்றால் பிரதான வழக்கில்  இருதரப்பும் தங்களின் வாதங்களை முன்வைக்கலாம். ஆணையத்தின் தரப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடங்கலாம்.

திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்: ஏற்கெனவே இந்த பிரதான வழக்கில் தடையாணை பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு மீது மட்டும்தான் விசாரணை நடத்த இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. பிரதான வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கில் எனது கட்சிக்காரரான திமுக தலைவர் கருணாநிதியிடம் விளக்கம் பெற்றுத்தான் வாதம் புரிய முடியும். அவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருப்பதால் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்.

நீதிபதி: வழக்கறிஞர்களின் அப்பாயின்ட்மென்டுக்காக எல்லாம் காத் திருக்க முடியாது. நாளையே விசாரணை தொடங்கும்.

பி.வில்சன்: இதுபோல வழக்கறிஞர் களை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது. இருதரப்பிலும் வழக்கறிஞர்களை ஒருங் கிணைத்து அதன்பிறகுதான் வாதிட பணிக்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘‘நீதிபதி ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர் நாளை (இன்று) ஆஜராகி வாதிட வேண்டும்’’ எனக்கூறி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.